Readers Write In #544: எனக்கு தெரிந்த ரங்கன்
- Trinity Auditorium

- Feb 3, 2023
- 4 min read
By G Waugh
Disclaimer: This is not intended to be a hagiography of the subject of this essay.
பொறுப்பு திறப்பு: இந்த கட்டுரையின் மையப்பொருளை துதி பாடும் நோக்கத்தோடு எழுதப்பட்டது அல்ல இந்த கட்டுரை.
2009. என் தலைவன் படம் கந்தசாமி வெளியாகி ஊரெல்லாம் பரபரப்பை கிளப்பிக்கொண்டிருந்தது. எனக்கு பெரிதாக படம் பிடிக்கவில்லை என்றாலும் மற்றவர்கள் என் தலைவன் படம் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் எல்லாரசிகர்களைப்போல எனக்கும் இருந்தது. என் கல்லூரி நூலக மேஜையின் மேல் யாருமே சீண்டிராத எக்கனாமிக் டைம்ஸ் பத்திரிகை புத்தம் புதிதாக வழவழப்பாக இன்றைய ராஷ்மிக்கா மந்தன்னா நீச்சல் உடையில் போஸ் கொடுப்பது போல் தனது மேனியை விட்டத்தில் ஒளிரும் ட்யூப் வெளிச்சத்திற்கு ஒய்யாரமாக காண்பித்து கொண்டு படுத்து இருந்தது.
கடைசி பக்கம் என்று நினைக்கிறேன், சேவல் வேஷத்தில் என் தலைவன் புகைப்படம் பொறிக்கப்பட்டு இருந்தது. திரை விமர்சனம் என அறிந்தேன். ஆவலோடு படித்தேன்.ஒரு முறை அல்ல, மூன்று முறை. படத்தை விமர்சகர் பாராட்டுகிறாரா அல்ல துவைகிறாரா என்றே விளங்கவில்லை. எதற்காக யாருக்காக இந்த விமர்சனம் எல்லாம் எழுதப்படுகின்றன என்றும் விளங்கவில்லை. எழுதியவர் பெயர் பார்த்தேன்– பரத்வாஜ் ரங்கன்.
***
2010 க்கு பிறகு அதே பெயரை இந்து நாளிதழில் பார்த்ததாக நினைவு. அதுவரை விமர்சனம் என்றால் ஒரு படத்தை பார்த்தால் எனக்கு தோன்றியவையே அந்த விமர்சகர்க்கும் தோன்றியது என்றால் அதுவே நல்ல விமர்சனம் என்று வரையறை வைத்திருந்தேன். பவித்ரா சீனிவாசன், மாலதி ரங்கராஜன் ஆகியோரே எனது ஆதர்ச விமர்சகர்களாக இருந்தார்கள். சினிமா பார்ப்பதற்கு தனியாக அல்லது ப்ரத்யேகமாக அறிவு அல்லது அனுபவம் வேண்டும் என்றெல்லாம் நான் எண்ணியதே இல்லை.
அடுத்த வருடம் நான் என் அலுவலகத்தில் பணியில் அமர்த்தப்பட்ட பின்பு மீதமிருக்கும் நேரங்களில் எல்லாம் எதாவது ஒரு இணையதளத்தை நோண்டி தூர்வாறிக்கொண்டிருப்பேன். ஏனென்றால் முதன் முதலாக என் வாழ்நாளில் எனக்கு இலவச இணைய வசதிதரப்பட்டது அப்போது தான். மெயில் பார்ப்பதற்காக மணிக்கு இருபது ரூபாய் கொடுத்து இண்டெர்னெட் சென்டரில் பணத்தை விரயம் செய்த என்னைப் போன்ற வயதினர்க்கே தெரியும் இலவச இணையம் என்பது எவ்வளவு பெரிய வரப்ப்ரசாதம் என்பது. ஆனால் எனது இணைய சேவை எனதுக்ளைண்டான பேங்க் ஆஃப் அமேரிக்காவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காரணத்தினால் எல்லா இணையதளங்களையும் அணுகுவதற்கு எங்களுக்கு அனுமதி தரப்படவில்லை. சினிமா சம்பந்தப்பட்ட எல்லா இணையதளங்களும் முடக்கப்பட்டிருந்தாலும் பரத்வாஜ் ரங்கனது தளம் மட்டும் பேங்கின் தணிக்கையை எப்படியோ தப்பித்து கொண்டிருந்தது.
உண்மையை சொல்லவேண்டும் என்றால் ரங்கனது விமர்சனங்கள் நாள்நாள் ஆக ஆக இந்து நாளிதழில் எனக்கு மட்டும் கொஞ்சம் எளிமை ஆவது போன்ற உணர்வு ஏற்பட்டுக்கொண்டிருந்தது. ஆனால் சினிமா பற்றிய அவரது கருத்துக்கள் எல்லாம் எனக்கு கொஞ்சமேனும் உடன்பாடு அற்றவை ஆக இருந்து கொண்டிருந்தன. உதாரணத்திற்கு வெறும் சமுதாய நல்லெண்ண கருத்துக்கள் மட்டும் நிறைந்திருக்கும் படங்களில் கிராப்ட் இல்லை என்றால் படத்தை குதறிவைத்திடுவார் ரங்கன். உதாரணத்திற்கு அங்காடி தெரு, வழக்கு எண் போன்ற படங்கள்.கம்யூனிச பின்னணியில் வளர்க்கப்பட்ட எனக்கு நல்ல கருத்துக்கள் மூலம் சமுதாயம் சீரமையும் என சிறுவயது முதல் சொல்லப்பட்டு வந்தது. உலகின் பல்வேறு நாடுகளில் ஐசென்ஸ்ட்டினின் பாட்டில் ஷிப் பொதெம்கின் திரைப்படம் பெரிய மற்றும் செல்வாக்கு பெற்ற பிரச்சார படமாக மக்கள் மத்தியில் உருவெடுத்ததை என் தந்தை என்னிடம் பல முறை சொல்ல கேட்டிருக்கின்றேன்.ஒரு சினிமாவின் நோக்கம் என்ன என்று மட்டும் பார்த்தால் போதும். அது முற்போக்காக இருக்கும் பட்சத்தில் அந்த படத்தில் கிராப்ட் இல்லை என்றாலும் பரவாயில்லை. அந்த படத்தை ஆதரிக்க வேண்டியது உனது பொறுப்பு என்று தான் தொழிற்சங்க வாதியான என் தந்தை என்னிடம் சொல்லி இருக்கிறார்.அனால் ரங்கனோ கலை என்பது கலைக்காக , மக்களுக்காக அல்ல என்ற தரப்பை ஆதரிப்பவர் போல் என்முன் காட்சி அளித்தார். என் கருத்துக்களோடு ஒப்பாதவரை நேசிக்கும் பழக்கமோ ஏன் மதிக்கும் பழக்கமோகூட அது வரையில் எனக்கு கிடையாது.
நாவல் வாசிக்கும் பழக்கம் இதே வயதில் தான் என்னை வந்தடைந்தது. எனது பிரக்ஞைக்கும் மனசாட்சிக்கும் சம்பந்தமே இல்லாத கருத்துக்குவியல்கள் தான் நான் வாசித்த செவ்வியல் இனத்தை சேர்ந்த சில நாவல்கள். இப்பேர்ப்பட்ட நாவல்களை உனக்கு பிடிக்கவில்லை என்றால் நீ அறிவீணன் என்று சொல்லுவது போல அந்த நாவல்கள் எல்லாம் எனக்கு தோன்றும். அதன் காரணத்தினாலோ அல்லது என்னுள் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்ட மாறுதல்களினாலோ எனது எதிர் தரப்பினரின் குரல்களுக்கும் நான் செவி சாய்க்க தொடங்கினேன்.ஒரு கட்டத்தில் அந்த எதிர் கருத்து என்பது எனக்கு ஏற்புடையதா என்ற கேள்வி அர்த்தமற்றதாகி அந்த கருத்தை வலியுறுத்துபவர் அதனை உணர்ந்து தான் உரைக்கிறாரா என்ற கேள்வியே எனக்கு முக்கியமாக பட ஆரம்பித்தது.அவர் இடத்தில் நான் இருந்தால் நானும் அதே கருத்தை தான் முன்வைத்திருப்பேனா என்ற சிந்தனை மட்டுமே அந்த கருத்து சொல்பவரை நான் மதிக்க வேண்டுமா வேண்டாமா என முடிவு செய்யும் கருதுகோள் ஆக மாறியது.
குஜராத் கலவரத்தை பற்றிய ஒரு திரைப்படம். அதற்கு ரங்கன் நல்ல விமர்சனம் தந்திருந்தார். முஸ்லீம்கள் இந்து மதவெறியர்களினால் எப்படி அந்த கலவரத்தின் போது வேட்டையாட பட்டனர் என்று நிறுவும் படம் அது. நந்திதா தாஸ் இயக்கிய படம் என்று நினைக்கிறேன். அந்த படத்திற்கு ரங்கன் அளித்த ஆதரவை சகிக்க முடியாது ஒரு வாசகர் சினிமா என்பது எல்லா பக்க உண்மைகளையும் எடுத்துரைத்து நடுநிலையாக நிற்க வேண்டும். இந்த படத்தில் முஸ்லீம்களின் பிரச்னைகளை மட்டும் அயோக்யத்தனமாக முன்வைத்திருக்கிறார் நந்திதா தாஸ். இதற்கு எப்படி நீங்கள் ஆதரவு அளிக்கலாம் என்ற தொனியில் ஒரு வாசகர் ரங்கனை வினவி இருந்தார்.அதற்கு ரங்கனோ சினிமா என்பது ஒரு செய்தித்தாள் கட்டுரையோதலையங்கமோ அல்ல. எல்லா தரப்பு உண்மைகளை கண்டறிய சினிமா காரர்கள் ஒன்றும் புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் அல்ல. சினிமா உணர்ச்சிகளின் பால் இயங்கும் ஒரு சாதனம். அது அந்த இயக்குனரின் ஆன்மாவை அது ஒருதலைப்பட்சமாக இருந்தாலும் கூட அப்படியே பிரதிபலித்தால் போதுமானது என பொருள்படும்படி பதில் அளித்திருந்தார்.இதை வாசிக்கும் வாசகர்களுக்கு எப்படி தோன்றி இருக்குமோ என எனக்கு தெரியவில்லை. இருளில் மணிக்கணக்காக அமர்ந்திருக்கும் ஒருவனுக்கு திடீரென ஒரு இடத்தில் வெளிச்சம் பாய்ச்சியது போன்ற உணர்வைஎனக்கு தந்தது இந்த விளக்கம். நான் முன்னே கூறிய, ‘கருத்து கூறுபவரின் நேர்மையை மட்டுமே நாம் உற்று நோக்க வேண்டும்’ என்ற எண்ணத்தோடு மிகவும் பொருந்திப்போவது போல இருந்தது ரங்கனின் இந்த விளக்கம்.
ஒரு விமர்சனத்தின் மூலம் இவ்வளவு சிந்திக்க வைக்கும் விமர்சகர் என்று நான் யாரையுமே அது வரை பார்த்தது கிடையாது.கொஞ்சம் மொழி ஆளுமை இருந்தால் மட்டும் போதும் நீயும் ஒரு விமர்சகன் என்று நமது சமூகத்தையே தவறான வழியில் நடத்தி வந்த முக்கால்வாசி முதல் தர பத்திரிக்கைகள் விமர்சனம் என்ற சினிமாவிற்கு இணையான கலையையே மலிவாக்கி கொண்டிருந்த காலத்தில் பெரும் இரைச்சல்களுக்கிடையே தனித்த ஆனால் உறுதிப்படைத்த அறிவின்(voice of reason) குரலாய் ரங்கனின் குரல் மட்டும் அமைந்திருப்பது போல எனக்கு தோன்ற ஆரம்பித்தது.
***
அந்த காலத்தில் எல்லாம் ரங்கன் தனது விமர்சனங்களை ஒரு முழுமையான செறிவான கட்டுரை வடிவிலேயே தந்து கொண்டிருந்தார். அதாவது சினிமா என்கிற கலை வடிவத்தை கட்டுரை என்னும் செவ்வியல் உரைநடை வடிவத்தின் துணை கொண்டே விமர்சனம் செய்து கொண்டிருந்தவர்களில்முதன்மை ஆனவர் ரங்கன்.இதன் மூலம் நான் சொல்லவருவது என்ன வென்றால் ரங்கனது கட்டுரைகளை படித்தால் அந்த சினிமாவை பற்றி நீங்கள் அறிந்து கொண்டு அதை அசைபோட மட்டும் அல்லாமல் நீங்கள் ஒரு எழுத்தாளர் ஆகவோ அல்லது விமர்சகர் ஆகவோ மாற விரும்பினால்அந்த வாய்ப்பையும் பயிற்சியையும்சேர்த்துஅவரே உங்களுக்கு விரும்பியோ விரும்பாமலோ தந்து விடுவார்.இவை அல்லாமல் ரங்கனது சொற்ப்ரயோகங்களும் கற்பனை வீச்சும் உங்களுக்கு அந்த படத்தை பற்றி அவருடன் நேர் எதிர் கருத்து இருந்தாலும் கூட அவர் எழுதும் ஆங்கிலத்தின் மேலும் அந்த கற்பனையின் லாவகத்தின் மேலும் ஒரு சிறியமையலையாவது ஏற்படுத்தாமல் இருக்காது. ஆனால் என்னை பொறுத்தவரையில் ரங்கனது அந்த காலத்து அதாவது 2020க்கு முந்தைய கட்டுரைகளை எல்லாம் உடனடியாக ரசிக்கும் திறனோ அவற்றின் செழுமையை உணர்ந்து சிலாகிக்கும் முதிர்ச்சியோ ஒருவருக்கு எளிதில் உருவாக கூடியது அல்ல.
கிட்டத்தட்ட நான் மூன்று வருடங்கள் கழித்து தான் அவரது கட்டுரைகளின் முழு அர்த்தங்களை எல்லாம் பார்வை இழந்தவர்கள் யானையின் முழு உருவத்தை கற்பனையால் கண்டடைவது போல கொஞ்சம் கொஞ்சமாக உணர துவங்கினேன்.சில நேரங்களில் எனது நண்பர்கள் ரங்கனது விமர்சனங்களின் சில கருத்துக்கள் முன்னுக்கு பின் முரணாக உள்ளன எனவெல்லாம் சொல்வதுண்டு.அதே நேரத்தில் ரங்கன் ஒரு சில இயக்குனர் நடிகர்களிடம் கரிசனத்தோடும் ஒரு சிலரிடம் கண்டிப்போடும் நடக்கிறார் என்றும் முறையிடுவதுண்டு. ரங்கன் அவர்களே இதை உண்மை என்று சில நேரத்தில் ஒப்புக் கொண்டாலும் ரங்கனது கட்டுரைகளையும் விமர்சனங்களையும் தொடர்ந்து வாசித்து புரிந்து கொள்ளுபவர் களுக்கெல்லாம் இது போன்ற உணர்வுகள் தோன்றாது என்பதே எனது புரிதல்.மூன்றாம் வகுப்பை படிக்காமல் நேராக ஆறாம் வகுப்பை படிப்பவர்களுக்கு ஏற்படும் குழப்பங்கள் போல தான் இந்த குற்றச்சாட்டுக்கள் எல்லாம்.
***
தன்னை பார்ப்பனன் என்று வசை பாடிய ஒரு இயக்குனரின் யாருமே கண்டுகொள்ளாத படத்தை தன்னுடைய தளத்திலே பிரத்யேகமாக பாராட்டியது, என்னை போல நமக்கு எழுத வருமா வராதா என குழப்பத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு ‘நீயும் ஒரு எழுத்தாளன் தானடா! நானிருக்கிறேன் உனக்கு!’ என்று தனது தளத்தை தாரை வார்த்துக்கொடுப்பது போன்ற இணையற்ற தனி மனித பண்புகளை படைத்திருக்கும் மனிதராக ரங்கன் நம் முன் நின்றாலும் ஒரு விமர்சகராகவும் எழுத்தாளராகவும் அவர் இந்த சமூகத்தில் தனித்து நிற்கும்அவதாரமே என்னை பெரிதும் கவர்வது.
ஆனால் அதைவிட குறிப்பிடத்தக்க எனக்கு மிகவும் நெருக்கமான ஒரு செயலின் மூலம் ரங்கன் என் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ஆனார். ஒரு முறை 2018 இல் விக்ரம் படங்களின் இரு ட்ரைலர்கள் ஒரே நேரத்தில் வெளி ஆனபொழுது Film companion இல் ஒரு வாக்கியத்தை ரங்கனது கட்டுரையில் படித்த ஞாபகம் வருகிறது.
‘விக்ரம் ஒருவரே இந்த தலைமுறையின் சிறந்த நடிகர். இந்த தலைமுறையின் சிறந்த மாஸ் ஹீரோவும் அவர் தான்!’
இந்த ஒரு வாக்கியம் போதாதா நான் காலத்திற்கும் ‘நான் ரங்கன் வாத்தியாரின் சிஷ்யன்டா! என்று மார் தட்டி கொள்ள?
Dedicated to BaradwajRangan on the occasion of his completion of 20 years as a Film Critic.




Comments