Readers Write In #649: அண்ணாமலை.. அண்ணாமலை..
- Trinity Auditorium

- Dec 11, 2023
- 3 min read
By Srinivasan Sundar
ஒரு சராசரியான நகர வளர்ப்பு தான் என் குழந்தைகளுக்கும் –அதுபோக தமிழ் நாடு மட்டும் அல்லாது பிற மாநிலங்களிலும் வாழ்ந்ததால் – தமிழை விட ஆங்கிலம் இயல்பாகவே வரும்; மேலும் Marvel, Pixar மற்றும் Disney படங்களை நாடி நிரம்புகளில் கொண்டவர்கள். இந்திய படங்கள் என்றால் பாகுபலி, RRR, பொன்னியின் செல்வன், லியோ போன்ற இன்றைய pan-இந்திய படைப்புகள் தான். இந்நிலையில் சென்ற வாரம் என்னுடன் அண்ணாமலை (1992, சுரேஷ் கிருஷ்ணா) பார்க்க அமர்ந்தனர். ஏன்? அன்று அவர்களுக்கு வேறு வழி இல்லை; கிடைத்த வரைக்கும் லாபம் என்று தான். நானும் விட்டு விட்டேன் – ரேப் மற்றும் கொடூர கொலைகள் இல்லாத ரஜினி படங்களில் அண்ணாமலை ஒன்று. சரி எப்படியும் பத்தி நிமிடதிற்கு மேல் தாங்காது என்று நானும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. ஆனால் ஆச்சரியம் – முழு படத்தை மூச்சு விடாமல் பார்த்தது மட்டும் இல்லாமல் இன்றைக்கும் அதைப் பற்றி பேசுகின்றனர்.
இம்முறையும், நான் படத்தை முழுவதாக ரசித்தேன். தன் மீது சேர் தெளித்து போன காரின் கண்ணாடியை கல்லை எறிந்து உடைக்கும் சிறு வயது அண்ணாமலையின் காட்சிகளில் இருந்தே படம் சிறுவர்களையும் ஈர்த்து விடுகிறது. ஜனகராஜின் ஆங்கில அட்ராசிட்டீஸ் இன்றும் நம்மை சிரிக்க வைக்கும். கழுத்தில் பாம்பு பின்பு அதை தொடரும் ‘கடவுளே! கடவுளே!’ சம்பவமும் நம்மை நெளிய வைக்காமல் சிறப்பாக கையாளப்பட்டுள்ள நகைச்சுவை. அப்பப்போ ஒரு அடிதடி காட்சி, நம் கவனத்தை தக்க வைத்துக்கொள்ள. இனிமையான, ஒன்றிலிருந்து மற்றொன்று மாறுபட்ட பாடல்கள். தேவா ரஜினிக்கு பாட்டு அமைத்த முதல் படம். இன்று வரைக்கும் ‘வெற்றி நிச்சயம்…’ வெய்ட். ஒரே பாடலில், ஒரு ஏழையான ஹீரோ பெரும் செல்வந்தனாகி விடுகிறான், பல வருடக் கதை ஐந்து நிமிடங்களுக்குள் அடைக்கப்பட்டு விடுகிறது. இரண்டரை மணி நேரத்திற்கும் மேல் ஓடக்கூடிய படத்தில் கதாநாயகனின் மாபெரும் வளர்ச்சியை, முதிர்ச்சியை காண்பிக்க வெறும் ஐந்து நிமிடங்களே! ஆனால் அதுவே போதுமானதாக இருக்கிறது. ஏன்?

முதற் காரணம், தன் பெயருக்குள்ளே காந்தம் கொண்டுள்ள ரஜினிகாந்த். திரையில் வேறு எவரும் இதைச் செய்திருக்க முடியாது; இன்று வரை செய்ததும் இல்லை. வெற்றிக்கொடி கட்டில் (படையப்பா, 1999) ரஜினியே தான் இந்த மாதிரியான திரைக்கதை சவாலை மீண்டும் மேற்கொண்டு, மீண்டும் வெற்றி கண்டார். கவனிக்க – சூரியவம்சம் நட்சத்திர ஜன்னலும் பல வருட கதையை, போராட்டங்களை ஐந்து நிமிடத்துக்குள் காட்டியது. ஆனால் அப்பாடல் முற்றிலும் மாறுபட்ட லாலாலா.. ரகம். இந்தக் கணக்கில் சேராது. (தவிர்க்க இயலவில்லை – ஒரு கதாநாயகனின் இது போன்ற மஹா மாற்றங்களை, மிக குறுகிய காலத்துக்குள் திரையில் தத்ரூபமாகக் காண்பித்த மற்றோரு படம், தேவர் மகன். கால ஓட்டம் இல்லை எனிலும் மாற்றம் பெரியது தான். ஆனால் பாடல் கூட கிடையாது. வெறும் ஒரு நிமிடத்திற்குள் சக்திவேல், தேவர் மகனாக மாறி மிரட்டி விடுவார். நடை, உடை, பாவனை அப்படி ஒரு சொடக்கு போடும் நேரத்தில் மாறிவிடும்!) சரி சரி.. ரஜினி படதிற்கு வருவோம்..
இரண்டாவது, கதாசிரியர்களின் தெளிவு. கதை ஒரு பால்காரன் எப்படி பணக்காரன் ஆனான் என்பது பற்றியதே அல்ல. நட்பைப் பற்றி; நண்பர்கள் விரோதிகள் ஆவதைப்பற்றி; பின்பு அவர்கள் ஒன்று சேருவதைப்பற்றி. இதிகாசத்தின் த்ரோனாச்சாரியார்-த்ருபதனின் ஆழ்ந்த நட்பு, சமூகம் மற்றும் பொரளாதார நிலையால் அவர்களுக்குள்ளே வரும் பிளவு, பின் இவர்கள் ஒருவருக்கொருவர் சராமாரியாக பழிவாங்குதல் போன்ற ஒரு கதை – ஆனால் கொடூரம் இல்லாது, பாசம் மற்றும் மன்னிப்பு போன்ற நல்லெண்ணங்களை, பகை, பணம் மற்றும் பழியுணர்வை விட ஒரு படி மேலே வைத்து உருவாக்கப்பட்ட கதை. குழந்தைகளையும் ஈர்க்கும் படி சுவாரசியமாகவும் சொல்லப்பட்டிருக்கிற விதம். தன் தாயில்லா மகனுக்கு நல்லது எண்ணும் ஒரு தொழிலதிபர், ஈர் உடல் ஓர் உயிர் என இருக்கும் நண்பர்கள், தன் விதவைத் தாயை தெய்வமாக வணங்கும் ஒருவன்: முக்கிய கதாபாத்திரங்கள் அனைவருமே நல்லவர்கள். முதலில் அடாவடி செய்யும் ஒரு அரசியல்வாதியும் பிறகு நல்லவனாகவே மாறி விடுகிறார். இந்த உலகின் எந்த மூலையிலும் சுமாராக புரிந்து கொள்ளக்கூடிய வயதில் இருக்கும் எவரையும் கவரக்கூடிய அடிப்படையான கோட்பாடுகள் – உழைப்பே உயர்வு; அன்பே வெல்லும்.
கையில் ஒரு நல்ல கதை கிடைத்து விட்டது, அதை செய்து முடிக்க சூப்பர் ஸ்டாரும் ஒத்துக் கொண்டு விட்டார், இன்னும் மூன்று மாதத்திற்குள் ரிலீஸ் – வேறு என்ன வேண்டும்! என மெத்தனமாகவோ, இல்லை பதட்டமாகவோ இல்லாத குழுவிடமிருந்து எவ்வளவு அழகான படம் வரும் என்பதற்கு உதாரணம் அண்ணாமலை. அவ்வளவு மெனக்கிடுதல்! எவ்வளவு அடர்த்தியான படைப்பு; மசாலா சினிமா இலக்கணத்திற்குள்ளும் அடங்கி. அண்ணாமலை சைக்கிள், ‘கூட்டி கழிச்சு பார்..’ என ரஜினி அல்லாத ஒரு கதாபாத்திரத்துக்கு பஞ்ச் டயலாக், கதாபாத்திரத்துக்கு பொருத்தமான நடிகர்கள் குறிப்பாக சரத் பாபு மற்றும் ராதாரவி, சூப்பர் ஸ்டார் ரஜினி டைட்டில் தீம் (இன்று வரைக்கும் பயன்பாட்டில் உள்ளது, நீக்கும் முயற்சிகளை மீறீ), படத்தில் வரும் பாட்டிலே நடிகர்களின் பெயரையே உபயோகிப்பது போன்ற நிறைய யுக்திகளை மிகவும் சாமர்த்தியமாக கையாண்ட ஒரு படம். அண்ணாமலையின் சில heroism காட்சிகள் இன்றும், முப்பது வருடம் கடந்த பின்னும், ஜொலிக்கின்றனவை; ரஜினியின் சக்தியை முழுமையாக உபயோகித்தவை – ஏலம் சீன், சவால் விடும் காட்சி, ரஜினிகாந்த் counter கணக்கு டயலாக் பேசுவது, escalator காட்சி போன்று. இது போக, நம் இதயத்தை தொடும் சில மிகவும் நெகிழ்ச்சியான காட்சிகள் வேறு.
படையப்பா (..பொம்பள, பொம்பளையா இருக்கனும்..), மன்னன் மற்றும் முத்து போன்ற சில ரஜினிகாந்த் படங்களில் ஒரு விதமான ஆண் ஆதிக்கம் நம்மைத் தாக்கும். ஆனால் அண்ணாமலை வேறு மாதிரி. தாய், தங்கை, காதலி, மனைவி, மகள் என்ற முக்கிய பெண்களை சூழ்ந்தே கதை நகரும்; மிக மரியாதையுடன் இந்த உறவுகள் கையாளப்பட்டிருக்கும்.
ராட்சத துப்பாக்கிகள் ஏந்தி பழிவாங்கும் படங்கள் படையாக படுத்தி வரும் இந்த காலகட்டங்களில், நட்பை ஆயுதமாக கொண்ட அண்ணாமலை ஒரு பொக்கிஷம். Avengers- ரசிகர்களையும் கவரக்கூடிய படம்.
மலே டா..!





Comments