Readers Write In #769: மலைகள்ஏறிவரும்ஒருகூட்டம்
- Trinity Auditorium

- Dec 30, 2024
- 4 min read
Srinivasan Sundar
சூது கவ்வ மட்டும் அல்ல, சில சமயம் பயணங்கள் மேற்கொள்ளவும் ஒரு குருட்டுத்தனமான முட்டாள்தனம் வேண்டும், முரட்டுத்தனமான புத்திசாலித்தனம் வேண்டும். சுருக்கமா சொல்லனும்னா நம்பிக்கை அவசியம். அண்மையில் அமர்நாத் யாத்திரை சென்றிருந்தேன். (அன்மை என்றால் சென்ற வாரம் என்று எண்ணிவிட வேண்டாம்.. குன்றத்தூர் சென்னைக்கு மிக அருகில் போன்ற அன்மை). அமர்நாத் யாத்திரை கடல் மட்டத்திலிருந்து சுமார் 12-13,000 அடி உயரத்தில் அமைந்துள்ள குகை ஒன்றில் தோன்றும் சுயம்பு பனி லிங்கத்தை தரிசிப்பதற்காகவே மேற்கொள்ளப் படுவது; ஒரு வருடத்தில் 40-50 நாட்கள் மட்டுமே அனுமதிக்கப் படும் இந்த யாத்திரையில் கட்டுக்கடங்காதோர் பங்கேற்கிறார்கள்; பனிப்பாறைகளுக்கு நடுவே மட்டுமல்லாது கஷ்மீரில் அமைந்துள்ளது இந்த ஸ்தலம். 2022-யில் யாத்திரைப் பாதையில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதால் சிலர் மாண்டனர், பலர் மறைந்தனர்; சில ஆண்டுகள் முன்பு வரை தீவிரவாதிகள் தாக்குதல்களையும் யாத்திரிகள் சந்தித்தனர். இவ்வளவு நிபந்தனைகள் இருந்தபோதும் நான் ஏன் அமர்நாத் செல்ல முடிவு செய்தேன்? தெரியவில்லை. பொதுவாக, அடுத்த நொடி நாம் என்ன செய்ய உள்ளோம் என்று நமக்கே தெரியாது – இதுவே வாழ்வின் அழகு கூட.
அமர்நாத்ஜி திருக்கோவில் வாரியத்தின் (Shri Amarnathji Shrine Board ) பொறுப்பு யாத்திரை நிர்வாகம் மற்றும் சம்மந்தப்பட்ட பணிகள். ராணுவம், துணை ராணுவம், கஷ்மீர் காவல் துறை போன்றவையும் யாத்திரைக்கு உறுதுணை. அனுமதி சீட்டு இல்லாமல் யாத்திரை செல்ல முடியாது; அனுமதி சீட்டு பெற விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரிடமிருந்து மருத்துவ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். சற்றே உஷாராக இல்லா விட்டால் இந்த இரண்டு படிகளைத் தாண்டுவதற்குள் அந்த வருடத்திற்கான யாத்திரை காலம் முடிந்துவிடும்.
இமாலய மலை அடுக்குகளில் அமைந்துள்ள இந்த புனித குகையை நடைபயணமாக அடைய இரண்டு வழிகள் உள்ளன – பல்தால் அல்லது பகல்காம். முதல் வழியில் சென்றால் புனித குகையை ஒரே நாளில் தரிசனம் செய்து விட்டு வர முடியும், ஆனால் இது கடினமான பாதை. பகல்காம் பாதைக்கு மூன்று-நான்கு நாட்கள் தேவை, ஆனால் அது சற்று எளியது. சரி சிங்கப் பாதை தான் நமக்கு லாயக்கு என்று யாத்திரை தினத்திற்கு முன் தினமே சோனமார்க் வந்து அடைந்தேன். ஸ்ரீநகரில் இருந்து சோனமார்க் சுமார் இரண்டு-மூன்று மணி நேரம், சோனமார்கிலிருந்து பல்தால் வெகு தொலைவில் இல்லை. பொதுவாகவே சோனமார்க் கஷ்மீர் சுற்றுலா பயணிகளை மிகவும் கவரக்கூடிய இடம். நிறைந்த பச்சை பசேல் புல்வெளி, கூர்மையான மரங்களைக் கொண்ட அடர்ந்த காடு, நீல-நீல வானம், ஆங்காங்கே கூச்சல் இட்டுச் செல்லும் சில் ஓடைகள், கேட்கவே வேண்டாம் – நாலாபக்கமும் விண்ணை எட்டும் பனி மலைகள்! பனிக்காலங்களில் இவை அனைத்தையும் ஆக்கிரமிக்கும் அழகான வெண்பனி. கஷ்மீர் வழியாக லதாக் (ஆம், சாருக் கான் மனிஷாவை துரத்திச் சென்ற குளிர் பாலைவன மலைகள் தான்) செல்வதற்கும் சோனமார்க் தான் ஒரு முக்கிய இடம். அமர்நாத் யாத்திரை காலத்தின் பொழுது சொல்லவே வேண்டாம் – சோனமார்க் ஜகஜோதியாக இருந்தது. ஆங்காங்கே சில தமிழ்க்குரல்களும் கேட்டது.
யாத்திரை தினத்தன்று காலை 4 மணிக்கு நான் பல்தால் அடைந்தபோது வேறு உலகத்திற்குள் நுழைந்த மாதிரி எனக்கு தோன்றியது. திட்டப்படி எனது நண்பர்களையும் இங்கே சந்தித்தேன்; சேர்ந்து யாத்திரை மேற்கொள்வதற்கு. ஆயிரக்கணக்கான கூடாரங்கள்; மக்கள் வெள்ளம்; வித விதமான மொழிகள். ‘ஹர ஹர மஹாதேவ்’ கோஷம். நான் மேற்கொண்ட அமர்நாத் யாத்திரை சுற்றுலாவிற்கும் பயணத்திற்கும் பிறந்த ஒரு குழப்பமான குட்டி. ஆனாலும் அங்கிருந்த மகத்துவத்தை என்னாலும் உணர முடிந்தது.
மிகவும் சீராக யாத்திரை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பெரும் பிரச்சனையோ பீதியோ இன்றி சுமார் 4:30 மணி அளவில் புனித மலையை ஏற தொடங்கினேன். யாத்திரை தொடங்கும் முதல் அடி, இரண்டாவது அடி என்று அடிகள் வைக்கும் பொழுது ஒரு புதுவித உணர்வு. பல சிந்தனைகள். ஆனால் ஒரே ஒரு கேள்வி மனதில் – இந்த கடினமான 14 கி.மீ. இமாலய மலைப்பாதையை நல்ல படியாக ஏறி விடுவோமா, இல்லை வழியில் யாரேனும் உதவிக்கு வந்து நம்மளை குதிரையில் அனுப்பி வைக்கும் நிலைமை ஏற்படுமா? ஒரு வேளை அதிக நாட்கள் ஆனாலும் பரவாகில்லை என்று பூப்பாதையை எடுத்திருக்க வேண்டுமோ? இரண்டு கேள்விகள். நம்ம ஊர்ல ஜுலை மாசம் ஜாலியா சுத்தாம எதுக்கு இவ்ளோ சிரமம்? மூன்று கேள்விகள். அப்டீ.. அடுக்கடுக்கா வினாக்கள், KBC மாதிரி.
பொதுவாக நம் வாழ்வில் எதேனும் பிரச்சனையோ அல்லது சவாலோ ஏற்பட்டால் நாம் முதலில் செய்வது – சுத்தி முத்தி பார்ப்பது தான். சின்ன பையன் அவனே சமாளிச்சான், நமக்கு என்ன! இவ்ளோ வயசான ஆளு அவங்களே நல்லா பண்றாங்க, நமக்கு என்ன ஒரு கை பாத்திரலாம்! இதே யுக்தியை கையாண்டு ஒரு ஆறு-ஏழு கி.மீ. கிடந்தேன். புதிதாக யாத்திரை மேற்கொள்கிறோம் என்ற குதூகலம் வேறு. ஆனால் ஒரு கட்டதிற்குப் பிறகு இவை என்னை கைவிட்டன. ஆங்காங்கே டீ, பழங்கள், பிஸ்கட் போன்றவை இலவசமாக வழங்கும் கூடாரங்கள், கழிவறைகள், மருத்துவ வசதிகள் என்று ஏற்படுத்தப்பட்டுருந்தன. குறை ஒன்றும் இல்லை. மக்கள் பெருந்திரளாய் வரும் இது போன்ற மற்ற இடங்களை கருத்தில் கொண்டோம் ஆனால், யாத்திரைப் பாதையின் சுகாதாரம் மற்றும் தூய்மை நன்றாகவே இருந்தன.
சரி பிரச்சனைக்கு வருவோம். பாதி தூரம் கடந்தாச்சு; ஆனால் எப்பொழுதும் இரண்டாவது பாதி, முதல் பாதியை விட கடினமானதே ஆகும். அடி மேல் அடி வைத்து நடந்தேன். பாதையின் ஒரு புறம் என்னை போல் பாத யாத்திரை செய்பவர்கள், மற்றொரு புறம் பல்லாக்கு மற்றும் குதிரையின் மேல் ஏறி யாத்திரை செல்பவர்கள். மரத்தான் ஓட்டத்தில் கவனித்திருப்பீர்கள்.. ஓட்டம் துவங்கும் பொழுது நூற்றுக்கணக்கானோர் ஒன்றாக ஓடுவார்கள். ஓட்டத்தின் தூரம் நீள நீள மக்கள் அவர் அவரின் திறமைக்கேற்ப சிறு சிறு குழுக்களாக சேர்ந்து ஓடுவார்கள். கடைசியாக ஓட்டம் முடியும் இடத்தைப் பார்த்தோமானால், கூட்டம் தேய்ந்து குழு தேய்ந்து, ஒற்றைப்பனை போல் வந்து சேருவார்கள். கிட்டத்தட்ட அதே போலத்தான் மலை மேல் ஏறுவதும். முடிந்தவரை நண்பர்கள் நாங்கள் குழுவாகவே சென்றோம்; முடியாத போது உணவுக் கூடாரங்களில் ஒன்று கூடினோம்; பிறகு பிரிவு.
இப்பொழுது வேறு ஒரு பிரச்சனை. அது ஜூலை மாதம், நான் சென்னையில் இருந்து சென்றேன். கஷ்மீரே என்றாலும் கோடை காலம் தானே இன்று ஓரிரு மெல்லிய ஸ்வெட்டர்களே எடுத்துச் சென்றிருந்தேன். சோனமார்கில் விசேஷமாக குளிர் ஒன்றும் இல்லாததால் பல்தால் செல்லும் பொழுது அவைகளைக் கூட எடுத்துச் செல்லத் தோணவில்லை. பல்தாலில் இருந்த நண்பர் ஒருவர் என் மனநிலை அறிந்து ஸ்வெட்டரை நியாபகமாக எடுத்து வர சொல்வதற்குள் நான் பல்தால் அடைந்து விட்டேன். பெரிதாக குளிர் ஒன்றும் இல்லை. ஆனால் பலரும் குளிருக்கான ஜாக்கட் அணிருந்தனர். சரி, பாவம், குளிர் தாங்காது போல என்று வியந்து கொண்டேன். ஆனால் மலையின் மேல் ஆயிரம் ஆயிரம் அடிகள் ஏற ஏற… நடுக்கம் – எனக்கு! அடடா முட்டாள் போல் இந்த முக்கிய விஷயத்தை மறந்து விட்டோமே எனத் தோன்றியது. இருந்தாலும் கெத்தை விடாமல் யாத்திரையை தொடர்ந்தேன். ஒரு சமயத்துக்கு பிறகு நண்பர்களில் ஒருவர் பையில் அவர் வைத்திருந்த தனது ஸ்வெட்டரை எடுத்து எனக்குக் கொடுத்தார். பிறகு ஒரு சூடான டீயை கொடுத்து விட்டு புனித குகையை நோக்கி சென்றோம், ஊன்றுகோலை பாதையில் குத்தியவாறு.
பல சமயங்களில் நாம் ஒரு இலக்கை அடைந்த பின்னர் நமக்கு கிடைக்கும் சந்தோஷத்தை விட, அதை நோக்கி நாம் எடுக்கும் வெவ்வேறு கட்ட முயற்சிகளின் பொழுது கிடைக்கும் நிம்மதியே பெரும் மகிழ்ச்சி அளிக்கக் கூடியது. இதற்கு அடிப்படை காரணம் நம் ஆசைகள் ஓய்வதில்லை. ஆசைகள் என்றால் லட்சியங்கள், கனவுகள், இலக்குகள், இத்தியாதியும் தான். ஒன்று முடிந்த மறுகணமே அப்பொழுது வரை உறங்கிக் கொண்டிருக்கும் அடுத்த இலக்கின் விதை விழித்துக் கொள்கிறது. இதனால்தான் என்னவோ பாத யாத்திரைக்கு ஒரு அந்தஸ்து உண்டு. இலக்கிற்கு மட்டும் அல்லாது பயணத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் பொருட்டு. இலக்கை தாமதப்படுத்துவதற்காக. இலக்கின் முக்கியத்துவத்தை அதிகரிக்க.
ஒரு கட்டத்துக்கு பிறகு கால்கள் அழத் தொடங்கி விட்டன. ஊன்றுகோலும் உதவவில்லை. அதற்குப் பிறகு நம்பிக்கை தான் கை, கால், சூடான டீ, எல்லாம். பரவச நிலை என்று ஒன்றை கூறுவார்கள். அதை அளக்க இயலாது, அவரவர் மனதிற்கு எது பரவசம் என்று தோன்றுகிறதோ அதுவே அவரவருக்கு அந்நிலை. மலைப்பாதையில் சுமார் ஒரு பத்து-பதினொன்று கி.மீ. ஏறிய பின், ஒரு பெரிய பலகை கண்ணில் படும். அதில் கொட்டை எழுத்துக்களில் ‘புனித குகையின் முதல் காட்சி’ என்று எழுதப்பட்டிருக்கும். அதுவரை வளைந்து நெளிந்து வந்து கொண்டிருந்த மலைப்பாதை இனி பொதுவாக ஒரு நேர்கோடாகவே செல்லும். அந்த இடத்திலிருந்து புனித குகையை தோராயமாக பார்த்த பொழுது எனக்கு உண்டான மகிழ்ச்சியை பரவச நிலை எனக் கூறலாம்! ஒரு புதுத்தெம்புடன் யாத்திரைத் தொடர்ந்தது.
‘..மலைகள் ஏறி வரும் ஒரு கூட்டம், நதியில் மூழ்கி எழும் பெரும் கூட்டம்…’ அது என்னமோ தெரியல, என்ன மாயமோ தெரியல 2024-ல் நான் இந்த இரண்டு கூட்டத்திலும், கூட்டத்தோடு கூட்டமாக சென்றுள்ளேன். நதிக்காக ரிஷிகேஷ்.
***





Comments