top of page

Readers Write In #792: “நீ ஏன் அரசியல்-னா இவ்ளோ biased ஆ இருக்க?”

  • Writer: Trinity Auditorium
    Trinity Auditorium
  • Apr 21
  • 4 min read

By Jeeva P

“ஏன் நடுநிலையா இல்லை? ஏன் இடதுசாரியா இருக்க?”

நான் என் நண்பர்களுடன் அரசியல் விவாதம் செய்யும்போதெல்லாம் நேரடியாகவே நான் நம்பும் பொதுவுடைமை சித்தாந்தத்தை ஒரு போதும் முன் வைக்க தயங்கியதே இல்லை. அப்போதெல்லாம் என்னிடம் உடனடியாக கேட்கப்படும் முதல் கேள்வி, மேலே சொன்னது தான். “ஏன் இவ்ளோ bias?”

ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தின் வழி நிற்கும்போது அந்த சித்தாந்தம் ஒருவனின் பார்வைக்கு கடிவாளம் போடுவதாகவும், அம்மனிதன் மென்மேலும் வளர்ந்து செல்ல அச்சித்தாந்தமே ஒரு தடையாக இருப்பதாகவும் பலரால் நம்பப்படுகிறது. இந்த நம்பிக்கையில் ஒரு அளவு உண்மை இருப்பதை ஒரு போதும் நான் மறுக்க போவதே இல்லை. நான் பிறந்தததில் இருந்தே ஹிந்துத்வ அரசியல் பயின்று வந்திருந்தால் நானும் கடிவாளம் போட்ட குதிரையை போல் மற்ற மதங்களை வெறுப்பவனாகவும் கண்மூடித்தனமான பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளனாகவும் உருவாகி வந்திருப்பேன். அதன் மூலமாக ஒரு தனி மனிதனாக எனது ஆன்மீக வளர்ச்சியும் (spiritual development) பெருமளவில் தடை பட்டிருக்கும் என்பதிலும் எனக்கு எந்த சந்தேகமமும் இல்லை. “ஹிந்தி சினிமாவில் ‘கான்’களே(Khan) கோலோச்சுகிறார்கள். அதனாலேயே நான் ஹிந்தி படங்களை பார்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது” என்று கூறும் சில ஹிந்துத்வ ஆதரவாளர்களை நான் நேரடியாகவே சந்தித்தது உண்டு.

ஹிந்துத்வ வலதுசாரி சித்தாந்தத்தை நான் பின்பற்றியிருந்தால் கண்டிப்பாக எவ்வளவோ சிறப்பான, சிந்தனையை தூண்டும் நல்ல ஹிந்தி படங்களை நான் தவற விட்டிருக்க கூடும். அது மட்டும் அல்லாது ஹிந்துத்வ ஆதரவாளர்களில் பலர், வரலாறு என்னும் ஒரு பெரிய, நெடிய, சிக்கலான நீரோட்டத்தை வெறுப்பு என்னும் ஒற்றைப்படையான, மேம்போக்கான கண்ணாடியின் வழியாக மட்டுமே பார்த்து புரிந்துகொள்வதையும், அதன் காரணமாக அறிவிற்கு கொஞ்சமும் ஓவ்வாத, அதே நேரத்தில் மிகவும் ஆபத்தான முடிவுகளுக்கு அவர்கள் வருவதையும் நான் பல முறை கண்டிருக்கிறேன். உதாரணத்திற்கு ‘இந்தியாவை ஆண்ட நேரு குடும்பம் பாகிஸ்தான் கேட்டால் இந்தியாவையே பிளந்து கொடுத்தாலும் கொடுத்துவிடும்’ என்பன போன்ற பல அபத்தமான நம்பிக்கைகளை ஹிந்துத்துவர்கள் கொண்டிருப்பதை நான் கவனித்ததுண்டு. ‘நீ நம்புவது உண்மை என்றால் எதற்காக பாகிஸ்தானை இந்திரா இரண்டாக பிரித்து வங்காளதேசத்திற்கு விடுதலை பெற்று தர வேண்டும்?’ எனக்கேட்டால் அவர்கள் கோபப்பட்டு உளற ஆரம்பிப்பதையும் நான் கண்டிருக்கிறேன். சரி.  அது அவர்களது நம்பிக்கை, அவர்களது அரசியல் அதை கேலி செய்து இப்போது நேரத்தை விரயம் செய்ய வேண்டாம் எனவே நினைக்கிறேன்.

“பொதுவுடைமை சித்தாந்தத்தை நம்புபவன் உண்மைலேயே ஒரு ‘biased person’ ஆ?” என்ற கேள்விக்கு வருவோம். இக்கேள்விக்கு பதில் தேட கொஞ்சம் நாம் வரலாற்றின் பின்னோக்கி செல்ல வேண்டி இருக்கும். பொறுமை இருந்தால் மேலே படியுங்கள். இது ஒரு குட்டி ஸ்டோரி தான்.

நாகரீகம் தோன்றிய காலம் தொட்டே, அதாவது நாம் பழங்குடி இன சமூகத்தை(tribal society) விட்டு வெளியேறிய முதல் கணத்தில் இருந்தே ஒருவித ‘சுரண்டல்’ (exploitation) சமுதாயத்திற்குள் தான் முதன் முறையாக காலடி எடுத்து வைத்தோம். இன்னும் தெளிவாக சொல்லப்போனால் ஒரு குழுவோ அல்லது ஒரு வர்க்கமோ மற்றோரு குழுவை சுரண்டி பிழைக்கும் சூட்சுமமே(design) அந்த குறிப்பிட்ட சமூக-பொருளாதார அமைப்பிற்கு அடிப்படையாக அமைந்துவிட்டது.

பழங்குடியின சமூக அமைப்பில் இருந்து வெளியேறி  நமது மனித இனம் காலடி எடுத்து வாய்த்த முதல் சமூக அமைப்பின் பெயர் – கொத்தடிமை சமூகம். (slave society). இதில் நில உரிமையாளர்கள் சிறிய அளவிலோ சில நேரங்களில் பெருமளவிலோ கொத்து கொத்தாக அடிமைகளை உருவாக்கி அவர்களின் உழைப்பின் பொருளையே சுரண்டி பிழைத்தனர். பல நூறு ஆண்டுகள் தொடர்ந்த இந்த அவலம் பல சமூக புரட்சிகளுக்கு பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக மாற்றப்பட்டு feudalism என்னும் நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பிற்குள் மனித இனம் காலடி எடுத்து வைக்க வித்திட்டது*. இந்த அமைப்பின் படி கொஞ்சமும் உரிமைகள் இல்லாமல் வறுமையிலும் பசியிலும் வாடித்திருந்த அடிமை மனிதன், ஒரு சில உரிமைகள் பெற்றவனாக வும் சமூகத்தில் ஒரு சிறிய அந்தஸ்தும் பெற்றவனாகவும் தேர்ச்சி பெரும் நிலை உருவானது. உதாரணத்திற்கு மாதந்தோறும் அவன் கடினமாக உழைத்த பொருளின் ஒரு சிறிய பங்கையாவது அவன் தன்வசம் வைத்துக்கொண்டு அதன் மீதத்தை அவன் தனது நிலச்சுவான்தாரிடம் ஒப்படைக்க அனுமதிக்கப்பட்டான். அவன் திருமணம் செய்துகொள்ளலாம், தன் குடும்பத்தோட சேர்ந்து ஒரு இடத்தில கண்ணியமாக வாழலாம் (அடிமை சமூகத்தில் இந்த உரிமைகூட இருந்ததாக தெரியவில்லை).

ஆனால் இந்த சமூக அமைப்பில் இந்த நிலச்சுவான்தார்களும் சில வசதி படைத்த வணிகர்கள் ஆகியோர் மட்டுமே அந்த குறுநிலத்தையோ, நாட்டையோ ஆளும் விதிகளை வகுக்க அதிகாரம் படைத்தவர்களாக விளங்கி வந்தனர். பல நூற்றாண்டுகளாக தொடர்ந்துவந்த இந்த சமூகம் 18 -ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து ஏற்பட்ட பெரும் அறிவியல் முன்னேற்றங்களாலும், சில சமூக புரட்சிகளாலும் கொஞ்சம் கொஞ்சமாக நாம் இன்று கண்டுகொண்டிருக்கும் முதலாளித்துவம் (capitalism) என்னும் புதிய சமூக அமைப்பினை நோக்கி நகர்ந்து வந்தது. இதன் காரணமாக நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே முதலாளியின் கீழே வேலை பார்க்கும் நிலை மனித குலவரலாற்றிலேயே முதன் முறையாக உருவானது. ஆனால் இந்த சமூகத்தில் புதிதாக ஓட்டுரிமை, பெண் விடுதலை, அனைவருக்கும் கல்வி போன்ற பல புதிய முற்போக்கான அம்சங்களும் ஆங்காங்கே தென்பட ஆரம்பித்தன. ஆனால் ஒரு தொழிலாளி தனது உழைப்பின் மூலமாக அவன் உருவாக்கிய ஒரு பண்டத்தை(commodity) முதலாளியிடம் கொடுத்து விட்டு, அப்பண்டத்தின் சந்தை விலையில்(price) மிக சிறிய பங்கை மட்டுமே கூலியாக பெற்றுக்கொண்டு அவன் இறுதியில் வறுமையில் வாடும் அவலமே பெருமளவில் நிகழ்ந்தது. இதன் காரணமாக அந்த பண்டத்தின் சந்தைவிலைக்கும் அந்த தொழிலாளிக்கு தரப்பட்ட அந்த கூலிக்கும் இடையே ஆன வித்தியாசத்தை, அதாவது உபரி தொகையை(surplus) அதனை விற்பனை செய்வதை தவிர வேறு எந்தவேலையுமே செய்யாத அந்த முதலாளியே அபகரித்துக்கொள்ளும் நிலை உருவானது. இந்த உபரி அபகரிப்பு (expropriation of surplus) முறையே முதலாளித்துவ சமூகத்தின் அடிப்படை விதியாக மாறியது. இதன் காரணமாகவே ஒரு நாட்டின் மக்கள் தொகையின் ஐந்து விழுக்காடு கூட தேராத ஒரு சிறு குழு அல்லது வர்க்கம் அந்நாட்டில் உழைப்பால் உருவான ஒட்டுமொத்த செல்வத்தின் பெரும்பகுதியை அபகரித்து கொள்ளும் நிலை உருவானது. இதன் விளைவாகவே பொருளாதார ஏற்றத்தாழ்வு என சொல்லப்படும் economic inequality, மனித குலம் தன் வரலாற்றில் இதற்குமுன் எப்போதுமே கண்டிராத அளவை அடைந்தது.

இன்று நாம் கண்டு கொண்டிருக்கும் சமூகத்தில் வெறும் பத்து விழுக்காட்டு மக்கள் நம் நாட்டின் ஒட்டுமொத்த செல்வத்தின் 75 விழுக்காட்டை தன்வசம் கொண்டிருப்பதாக சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த நிலை தொடர்ந்தால் கொலை, கொள்ளை, கலவரங்கள் என நமது சமூகம் பலவாறாக பிளவு படும் என்றும் பல பொருளாதார அறிஞர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

***

நான் மேலே சொன்ன குட்டி கதையை எனக்கு புகட்டியது ஜெர்மனியில் பிறந்து லண்டனில் வாழ்ந்த பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆகச்சிறந்த சிந்தனையாளர் ஆன கார்ல் மார்க்ஸ் தான். நான் முன்வைக்கும் பொதுவுடைமை அரசியல் அல்லது இடதுசாரி அரசியலை உருவாக்கியவரும் அவர் தான். மனிதகுல வரலாற்றை அதன் பொருளாதார அமைப்பினூடாக அறிந்து கொள்ளும் வித்தையை உலகிற்கு முதன் முதலாக கற்று கொடுத்தவரும் அவர் தான். இந்த வித்தைக்கு ஆங்கிலத்தில் எகனாமிக் டீடெர்மினிசம் (economic determinism) என்று பெயர். இந்த முறையின் படி ஒரு காலகட்டத்தினுடைய பொருளாதார அமைப்பை(economic system) மட்டும் ஒருவர் குறிப்பிட்டால் அந்த சமூகத்தின் அறங்களையும் (values), குணாதிசயங்களையும்(features) ஒருவரால் எளிதாக கூறிவிட முடியும். உதாரணத்திற்கு நிலப்பிரபுத்துவ காலம் என்று சொன்னால் அந்த சமூகத்தில் பெண்கள் பெருமளவில் அதன் ஓரங்களிலோ அல்லது அடிமட்டங்களிலோ தான் ஒதுக்கிவைக்கப்பட்டிருப்பார்கள் இருப்பார்கள் என்பதை கண்டிப்பாக  கூறிவிடலாம். அதுவே முதலாளித்துவம் என்று சொன்னால், அந்த அமைப்பின் பரிணாம வளர்ச்சிக்கேற்றவாறு அப்பெண் சமூக விடுதலையின் எந்த கட்டத்தில் இருக்கிறாள் என்பதையும் எளிதாக கூறிவிட முடியும். இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகள் இப்போது தான் நிலப்பிரபுத்துவ சமூகத்தில் இருந்து மெதுவாக முதலாளித்துவ சமூக அமைப்பை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன(transition stage). எனவே இங்கே இந்த இரண்டு சமூக அமைப்புகளின் குணாதிசயங்களும் ஒரே இடத்தில் வசிப்பதையும்  நம்மால் காண முடியும். இதன் காரணமாகவே தான் ஒரே நாட்டின் ஒரு இடத்தில பிறந்திருக்கும் ஒரு பெண் ஒரு பெருநிறுவனத்தின் தலைவராக வருவதையும் அவளே அந்நாட்டின் வேறு ஒரு இடத்தில பிறந்திருந்தால் பூப்படைந்த சிலவருடங்களிலேயே கல்வி நிறுத்தப்பட்டவளாகவும் திருமணத்திற்குள் திணிக்கப்பட்டவளாகவும் இருப்பதையும் நம்மால் காண முடியும். அதே நேரத்தில் ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் முதலாளித்துவம் என்னும் சமூக அமைப்பு முதிர்ச்சி பெற்ற நிலையில் இருக்கும் காரணத்தினால் மட்டுமே  இது போன்ற விந்தைகளை அங்கே காண்பது மிக மிக அரிதாகிறது.

ஒரு குறிப்பிட்ட எடை கொண்ட ஒரு கல்லை ஒரு குறிப்பிட்ட வேகத்தில் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் ஒரு குறிப்பிட்ட கணத்தில் தூக்கி எறிந்தால் அதே கல் ஒரு குறிப்பிட்ட வினாடியில் எந்த கோணத்தில் அந்தரத்தின் எந்த பகுதியில் சென்று கொண்டிருக்கும் என்று இயற்பியலின் projectile  theory – இன் மூலமாக கண்டுபிடித்துவிட முடியும். அதே போல் தான் பழங்குடியினத்தவனாக தன் வரலாற்றை ஆரம்பித்த மனிதன் கொத்தடிமை ஆனதையும், பின்னர் ஒரு நிலச்சுவான்தாரிடம் கூலிக்காரன் ஆனதையும், பின்னர் முதலாளித்துவத்தில் ஒரு உரிமை பெற்ற ஒரு நாட்டின் குடிமகன் ஆனதையும் வெறும் அவன் வாழ்ந்த பொருளாதார அமைப்பின் துணை கொண்டே மார்க்சியத்தால் கச்சிதமாக கூறவிட முடியும். இதை வைத்து கொண்டே இன்னும் சில நூற்றாண்டுகளில் மனிதன் முதலாளித்துவத்தை கடந்து எந்த விதமான புதிய சமூக பொருளாதார அமைப்பை நோக்கி நகர்வான் என்பதையும் மார்க்ஸ் தனது புத்தகங்களில் ஒரு அளவுக்கு தீர்க்கமாகவே கணித்து உள்ளார். இத்தகைய வித்தைகளை எல்லாம் தன்வசம் வைத்திருந்த காரணத்தினால் மட்டுமே 1800-களில் இருந்துகொண்டே அப்பெரும் சிந்தனையாளனால் இன்று 2025 -இல் உலகம் முழுவதும் பரவி இருக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வு என்னும் பெரும் தொற்றை பற்றி கச்சிதமாக கணிக்க முடிந்தது. இதே வகையறாவில் வந்த இந்திய மார்க்சியவாதிகளும் 1990 -களிலேயே அடுத்த 30 வருடத்தில் இந்தியாவில் விவசாயம் பெரும் சீர்கேட்டுக்கு ஆள் ஆகும் என்றும், கருப்புப்பண பிரச்சனையால் நாட்டில் ஏற்றத்தாழ்வு அதிகரிக்கும் என்றும், இந்துத்த்துவ அரசியலால் மதக்கலவரங்களும், ஜாதிப்பூசல்களும் தலை விரித்து ஆடும் என்றும் மிகச்சரியாகவே கணித்து வைத்தனர். இதையெல்லாம் படித்து விட்டு நான் bias -ஆகாமல் இருக்க வேண்டும் என்றால் அப்படிப்பட்ட சாதனையின் மூலம் நான் பெருமை அடைவதற்கு என்ன இருக்கிறது என்று மட்டும் நீங்களே எனக்கு சொல்லுங்கள் !

*நடுவில் serfdom என்னும் ஒரு இடைப்பட்ட சமூக அமைப்பை பற்றி நான் குறிப்பிடவில்லை, காரணம் கதையை சுருக்கவதற்காக தான்.

மேலும் படிக்க :

1. The origin of family, private property and the state by Friedrich Engels

2. Capital by Karl Marx

 
 
 

Comments


Post: Blog2_Post

Subscribe Form

Thanks for submitting!

(213) 270-2839

©2022 by Hayat Hotel. Proudly created with Wix.com

bottom of page