Readers Write In #801: அடிமன தாகம்
- Trinity Auditorium

- May 19
- 1 min read
By ஒரு லெஸ்பியன் பெண் / A Lesbian Woman
அவள் ஸ்பரிசம் என் மீது பட உள்ளுக்குள் ஒரு அமைதி இதுவே இயல்பு என்ற அமைதி மெல்லிய சாரல் போல் மனதை வருடும் ஒரு அமைதி அவள் இரு விரல் தான் என் கை மீது ஆனால் அதில் ஒரு அதீத உணர்வு இந்த ஸ்பரிசம் தொடுவதற்காக தானே என் உள்ளம் இத்தனை நாள் பாலைவனமாக காத்துக்கொண்டிருந்தது
கடந்த முப்பது ஆண்டுகளில் அதே இருவிரல் ஆனால் ஆண்மகனின் அது என்னைத் தவறியும் தொடவே விடாமல் பாம்பு போல் பதறி விலகுவேன் உள்ளுக்குள் ஒரு சங்கோசம் ஏற்படும் என்னவென்றே புரிந்ததில்லை எனக்கு வரப்போகும் ஒருத்தன்தான் என்னைத் தொட வேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன் அந்த ஒரு அபூர்வ ஆண்மகன் வரவேயில்லை இனிமேல் தான் பிறக்க வேண்டும் என கேலி செய்வேன் ஆனால் என்னை அறியாமல் என் உள்மனம் காய்ந்திருந்தது ஒரு பாலைவனம் போல்; திசை திக்கு தெரியாமல் அலைந்தேன் ஒரு ஊற்றைத் தேடி எது ஊற்று என்றே தெரியாமல்
அவள் ஸ்பரிசம் அது தான் என் அடிமன தாகம் அது தான் என் மனம் தேடிய அமைதி ஒரு மனுஷியாக இதை உணர இவ்வளவு நாள் எடுத்ததே! இது தான் சமூகம் மேல் என் கோபம் என்னைப்போல் எத்தனை ஆயிரம் பேர் என்னவென்றே தெரியாத மன தத்தளிப்பில் இருப்பார்கள் நினைத்தாலே ஒரு பெரிய சோகம் என்னைப் பீடிக்கிறது!





Comments