Readers Write In #807: ஒரு தற்கொலை
- Trinity Auditorium

- Jun 4
- 4 min read
By Jeeva P
பதினேழு ஆண்டுகளுக்கு முன்..
காதை பிளக்கும் சத்தம்.
“இவனுகல கேக்க யூனியன் னு ஒன்னு இல்லாததுனாலதான இப்படி பன்றானுக?” அப்பா எப்பொழுதும் போல பேப்பரை விரித்துக்கொண்டு கோபத்தில் திட்டிக்கொண்டிருந்தார். அப்பா தொழிற்சங்கவாதி. கம்யூனிஸ்ட்.
அம்மா மிக்ஸியை அணைத்தாள்.
“என்னங்க?”
“அமெரிக்காவில் ஏதோ ரிசேஷன் ஆம். பெரிய நிறுவனங்கள் கூட வேலை பாக்றவங்கள வேலைய விட்டு தூக்குதுங்கலாம்!” அப்பா அம்மாவுக்கு விளக்கினார்.
“சரி அதுக்கு ஏன் நீங்க கோவப்படறீங்க? அவங்கள தான தூக்கறாங்க?” அம்மா மறுமொழி கூறினாள்.
“இந்த கம்பெனி லாம் நல்லா இருந்த காலத்துல எவ்வளவு லாபம் பாத்துருப்பானுக? எவ்வளவு சொத்து சேர்த்துவெச்சிருப்பானுக? இப்போ ரிசெஷன் வரும்போது அதெலாம் வித்து லாபத்துல வர குறைச்சலை ஈடு கட்டலாம்ல? இத்தனை வருஷம் இவங்களுக்கு லாபம் சேர்த்துக்குடுத்த ஊழியர்களை தூக்கி தான் சமாளிக்கணுமா என்ன? நான் முதலாளி னு வெச்சிக்கோ. நீ எனக்காக தோட்டத்துல வேலை செய்ற ஆள் னு வெச்சிக்கோ. உன்ன வெச்சு நான் நல்லா சம்பாதிச்சு இன்னும் 3 தோட்டம் வாங்கறேன் ஒரே வருஷத்துல. அப்புறம் ஏதோ மழை இல்லாதது நாலா அடுத்த வருஷம் என்னால அதே மாதிரி இன்னும் 3 தோட்டம் வாங்க முடியாம போகுது! அப்போ உன்னையும் உன் கூட வேலைபார்த்தவங்களையும் நான் வேலைய விட்டு தூக்கினா நீ என்ன சொல்லுவ?” அப்பா அம்மாவிடம் விடுவதாக இல்லை.
“காலைல ஏங்க இதெல்லாம் உள்ள போட்டு டென்ஷன் ஆகிக்கிறீங்க?” என்று அம்மா பிரசங்கத்தை நிறுத்த முயன்றாள்.
“நான் கேட்டதுக்கு பதில் சொல்லு முதல்ல!” அப்பா.
“நல்லா இருக்கும்போது வாங்கின தோட்டத்துல ஒண்ணுத்தை வித்து எங்களுக்கு சம்பளம் குடுங்க னு சொல்லுவேன். போதுமா?” அம்மா பதில் கூறினாள் முகத்தில் இருக்கும் வேர்வையை புடவை தலைப்பால் துடைத்துக்கொண்டே.
“கரெக்ட். அதைதான இவனுகளும் செய்யணும். இவ்ளோ பெரிய நிறுவனத்தை கட்டி எழுப்பினது அந்த ஊழியர்கள் தான். இன்னைக்கு அந்த முதலாளிகளுக்கு ஒரு சின்ன பிரச்சனை னு சொல்லும்போது அவங்கள வேலைய விட்டு தூக்கிறது நன்றி கேட்ட தனம் தான?” அப்பா அநேகமாக தனது பிரசங்கத்தை முடிப்பது போல தோன்றிற்று எனக்கு.
“சரி தான். நன்றி கெட்டவனுக தான் முதலாளிக. இப்போ என்ன செய்ய முடியும்?” அம்மா அப்பாவை சமாதான படுத்த முயன்றுவிட்டு சமையல் அறைக்குள் மீண்டும் நுழைந்தாள். மீண்டும் மிக்ஸி சத்தம் கேட்க துவங்கியது.
***
ஒரு தற்கொலை என்று ஒரு சிறுகதை படித்தேன் சமீபத்தில். ஆதவன் சுந்தரம் எழுதியது. அதில் ரகு என்ற 1970 -களில் வாழ்ந்த ஒரு வேலையில்லா இளைஞனின் ஒரு நாள் எண்ண ஓட்டங்களைப் பதிவு செய்திருப்பார் ஆசிரியர். அவனுக்கு தனது வீட்டு வேலைக்காரியின் மகள் தற்கொலை செய்து கொண்ட செய்தி அவன் காதிற்கு வரும். அவள் தன்னைத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக்கொண்டு விட்டதாக கேள்விப்படுவான். அவனது நாள் முழுவதும் அந்த சிறுமியை பற்றியே பேசிக்கொண்டிருப்பான் அந்த இளைஞன். அவளுக்கு ஏற்பட்டிருக்க கூடிய வேதனை, அவள் தவறவிட்ட அந்த வாழ்க்கையின் எண்ணற்ற சாத்தியங்கள் எல்லாம் சேர்ந்து அவனை அவனது நண்பர்களிடம் புலம்ப வைக்கும்.
அவனது நண்பர்கள் அனைவரும் இந்த சமுதாயத்தில் ஒரு நல்ல பணியில் அமர்ந்திருப்பவர்களாக இருப்பர். அனைவருக்கும் தினசரி கடமை, முன்னரே வகுக்கப்பட்ட, மாற்றத்திற்கு உட்படாத நேர எல்லைகள், அவர்கள் திருப்திப்படுத்தவேண்டிய நபர்கள் என பல கடிவாளங்களுக்கு உட்பட்டு அவர்களுடைய சிந்தனை மிகவும் குறுகியதாகவும், தன்னை நேரடியாக பாதிக்காத எதையும் பொருட்படுத்தாததாகவும் இருக்கும். ஆனால் ரகுவோ மனதளவில் ஒரு கலைஞனுக்கான உந்துதல் உள்ளவன் ஆகவும் தினசரி கடமைகள் இல்லாததால் கட்டுக்கடங்காதவனாகவும் இருப்பதை படிக்கும் நம்மால் உணர முடியும். ரகுவுக்கும் அவனது நண்பர்களுக்கும் இருக்க கூடிய இந்த முரணே அந்த கதையின் மையமாக இருக்கும்.
***
அவனது நண்பர்கள் அந்த சிறுமிக்கு நடந்ததைப்பற்றி கேள்விப்பட்டு பெரிதாக மனதளவில் எந்த அலைக்கழிப்புகளுக்கும் உட்படாமல் இருப்பதும், இந்த எந்திர உலகம் அந்த கொடூர மரணத்தை எளிதாக கடந்து செல்லுதலும், அதே நேரத்தில் அதே சம்பவம் தனக்குள் மட்டும் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் வேதனையையும் உளஎழுச்சிகளையும் குறித்து ரகு நாள் முழுவதும் அவதிப்படுவதே அந்த கதை. அவன் மனதளவிலும் திறனளவிலும் ஒரு கலைஞனாய் இருப்பினும் அவன் தன தந்தையின் சொற்படி பொறியியல் துறையில் தனது படிப்பை முடித்து விட்டு வேலைக்குப்போவதற்காக காத்துக்கொண்டிருப்பான். கதையின் முடிவில், அவனது மனக்குமுறல்கள் இறுதியில் ஒரு உச்சத்தை அடையும்போது மனதை உலுக்கும் யாரும் எதிர்பார்க்காத ஒரு ஞானோதயத்தை அடைவான் – தானும் ஒரு நாள் தனது நண்பர்களைப்போல் ஒரு சராசரி பணியில் அமர்த்தப்பட்டவனாக, கறாரான வரையறைகளுக்குள் சிறைப்பட்டவனாக தன்னை நேரடியாக பாதிக்காத எதையும் பற்றி கொஞ்சமும் பிரக்ஞையோ அக்கறையோ இல்லாதவனாக இந்த உலகம் தன்னை கண்டிப்பாக மாற்றிவிடும்! அப்போது அவனும் அந்த சிறுமியைப்போல் எவரோ ஒருவர் தற்கொலை செய்துகொண்டாலும் கூட அதைப்பொருட்படுத்தாமல் கடந்த செல்லும் ‘பக்குவம்’ என சொல்லப்படும் அந்த உணர்ச்சியற்ற நிலையை அடைந்திருப்பான் !! நியாயமாக ஏற்படக்கூடிய உணர்ச்சிகளைக்கூட கொன்று விட்டு ஓர் எந்திரம் போல் தனது தினசரி கடமைகளை முடிக்க கட்டுப்பட்டவனாக அவன் மாறி இருப்பான்! இறுதியில் இது அல்லவோ தற்கொலை என்று உணர்த்தும் பொருட்டு ஆதவன் கதையை முடித்திருப்பார்.
***
உள்ளத்தை அள்ளித்தா படத்தில் ஒரு காட்சியில் கதாநாயகன் கார்த்திக் ரோட்டில் நின்று சண்டையிட்டு கொண்டிருப்பார். அதை பார்த்த மணிவண்ணன் குறுக்கே இடை மறித்து ஏன் சண்டையிடுகின்றாய் என்று கேட்பார்.
“ரோட்ல அநியாயம் நடக்குது நான் கேட்காம வேற யார் கேப்பா?” என்பார் கார்த்திக்.
“தம்பிக்கு வேல ஏதும் இல்ல போல?” என்பார் மணிவண்ணன்.
“எப்படி சார் கண்டுபிடிச்சீங்க?
“வேலை இல்லாதவன் தான் நாட்ல இருக்கற அநியாயத்தெல்லாம் தட்டி கேப்பான். வேலை இருக்கறவன் டூட்டிக்கு டைம் ஆச்சு னு கெளம்பிருவான் ல! என்று சிரிப்பார் மணிவண்ணன்.
***
திருமணம் முடிந்த முதல் இரு மாதங்களில் என் மனைவிக்கு செய்தித்தாளில் வரும் செய்திகளை வாசித்து அதில் மனதை உலுக்கும் சம்பவங்களும் அநியாயங்களும் பிரசுரிக்க பட்டிருக்குமாயின் அதனை அவளிடம் விவரித்து எனது எண்ண குமுறல்களைக் கொட்டித் தீர்ப்பேன். பெரும்பணக்காரர்கள் tax havens என சொல்லப்படும் வெளிநாட்டு வங்கிகளில் தமது சொத்துக்களை பதுக்கி வைத்திருப்பதும் அதே நேரத்தில் சிகிச்சை செய்ய பணமில்லாத லட்ச கணக்கான உழைக்கும் மக்கள் தங்கள் உற்றார் உறவினரை மரணத்திற்கு படையல் அளித்துவிட்டு போவதையும், இந்தியா போன்ற நாட்டில் இவ்விரு சம்பவங்களும் நடைபெறும் நெஞ்சை பிசையும் இந்த விந்தையையும் அவளிடம் பல உதாரணங்களுடனும், வெவ்வேறு சொற்ப்ரயோகங்களுடனும் விவரித்து என் மனதின் கொந்தளிப்புகளை அவளிடம் கடத்த முற்படுவேன்.
ஆனால் ஒவ்வொரு முறையும் அவள் அவற்றை எல்லாம் சுலபமாக கடப்பது ஆரம்பத்தில் எனக்கு பெருஞ்சினத்தைமூட்டுவதிலே போய் முடிந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு முறையும் அவளிடம் நான் விளக்கம் கேட்கும்போதெல்லாம்,
“இப்படிதான் நடக்கும் என்று எல்லார்க்கும் தெரியுமே! நீங்க மட்டும் டென்ஷன் ஆகி என்ன பண்ணபோறீங்க? கெட்டவங்களாம் நல்ல தான் இருக்காங்க.. நல்லவர்களும் கஷ்டப்படறவங்களும் கஷ்டப்பட்டுட்டு தான் இருப்பாங்க! நீங்க தான் மகாநதி படம் fan ஆச்சே! நான் இதெல்லாம் உங்களுக்கு சொல்லனுமா என்ன? ஒன்னு இதெல்லாம் பத்தி படிக்காம இருங்க ! இல்லனா படிச்சுட்டு free ஆஹ் கடந்து போக ட்ரை பண்ணுங்க!” என்று பதில் கூறுவாள்.
கால போக்கில் நானும் பத்திரிகை வாசிப்பதை குறைத்துக்கொள்ள ஆரம்பித்தேன். சில நேரங்களில் சமூக ஊடகங்களில் வரும் செய்திகளில் ஏதாவது ஒன்று என்னை வேதனையுற செய்யுமாயின் அவற்றையும் கடந்து செல்லுதல் எப்படி என்று அனுபவப்பாடம் பயில முற்பட்டேன்.
வருடங்கள் ஓடின. கடிவாளமிட்ட, குறுகிய வரையறைகளுக்குள்ளும், அன்றாட வாழ்க்கையின் சிற்றின்ப துன்பங்களுக்குளே வெளிப்புற சம்பவங்கள் அண்டாத கண்- காது-மூளை அடைக்கப்பட்ட கட்டுப்பெட்டி வாழ்க்கை பழகவும் பயிலவும் சுலபமாகத்தான் இருந்தது. அப்படியே அதிலும் அழைக்கழிப்புகள் நேரும் பட்சத்தில் அவற்றுடன் போராடி வாழ்வதில் நேரம் சரியாக இருக்க தொடங்கியது. சமூகத்தை பற்றி சிந்திக்க நேரமும் ஆவலும் குறைய தொடங்கியது. மூன்று வருடங்கள் செய்தித்தாள் வாங்குவதையே நிறுத்திவிட்டேன்.
சமூக ஊடகங்களை அலசுவதும் குறைந்தது. ott-களில் சினிமா, சீரீஸ் பார்ப்பது என வாழ பழகிக்கொண்டேன். என் நண்பர்கள் அரசியல் பேச அழைத்தாலும் அவ்வாய்ப்புகளை மறுக்க துவங்கினேன்.
நாட்கள் உருண்டன.
ஒருமுறை என் அலுவலக மேலாளரிடம் இருந்து அழைப்பு வந்தது.
“ஜீவா, இந்த வருடம் நம்ம கம்பெனி நெலம அவ்வளவு சரியில்ல. நம்ம டீம் லே கூட யாராவது தூக்கினாலும் தூக்குவாங்க. உங்க பேர் கூட லிஸ்ட் ல இருக்கு. கவனமா இருங்க!” என்றார்.
பீதி அடைந்தேன். சென்ற வருடத்தில் நான் வேலையின் பொழுது செய்த தவறுகளை பட்டியலிட்டேன். எப்படி அவற்றை தவிர்த்திருக்கலாம் என்று சிந்திக்க துவங்கினேன். இந்த நிலைமைக்கு நான் காரணமா அல்லது எனக்கு ஏற்பட்ட உடல் மற்றும் மனநல குறைப்பாடுகள் காரணமா? நன்றாக வேலை செய்தும் இப்படி ஒரு அவலநிலையா? கண்முழித்து பன்னிரண்டு மணிநேரமெல்லாம் வேலை பார்த்த நாட்களை எல்லாம் எண்ணிப்பார்த்தேன். நான் படிக்க வேண்டும் என்று எடுத்து வைத்து வேலை பளுவின் காரணமாக தொடவே செய்யாத புத்தகங்களையும் எண்ணி பார்த்தேன்.
ஜன்னலோரம் சாய்ந்து, விட்டத்தை பார்த்த வாறு படுத்துக்கொண்டேன். அம்மா அருகில் வந்தாள்.
“என்னடா?”
“வேலை போயிரும் போல மா. கம்பெனி நெலம சேரி இல்லயாம். அமெரிக்கால இந்தியால எல்லா இடத்துலயும் ஆள தூக்கறாங்களாம்!” நிலைமையை மேலும் விளக்கமாக எடுத்துரைத்தேன்.
அம்மாவின் முகத்திலும் சோகத்தின் கோடுகளும் சுழிகளும் தெரிய துவங்கின. “உன்ன மாதிரி எவ்ளோ பேர வெச்சு எவ்ளோ சம்பாதிச்சுர்ப்பானுக? மனசாட்சி வேணாம்? லீவு கூட போடாம எத்தனை நாள் வேல பாத்திருப்ப?“
எழுந்து உட்கார்ந்து அம்மாவின் மடியில் கை வைத்தேன். அம்மா என் பழைய கம்யூனிச கோபத்தை தட்டி எழுப்ப முயன்றது போல் தோன்றியது. அப்பாவின் சொற்களை அம்மா ஒப்பிப்பது போலவும் தோன்றியது.
“விடுமா! கார்ப்பரேட் கம்பெனி! அப்படி தான் இருக்கும்! எங்களை தூக்கினா தான் அவன் ஷேர் ஹோல்டேர்ஸ் க்கு பதில் சொல்ல முடியும்! பார்ப்போம்!! என்ன பண்லாம் னு!” என்று சொல்லி எழுந்து சென்றேன்.





Comments