top of page

Readers Write In #809: வலதுசாரி ஆதரவாளர்கள் அடிப்படையில் சாதி, மத, இனவெறியர்களா ?

  • Writer: Trinity Auditorium
    Trinity Auditorium
  • Jun 7
  • 6 min read

By Jeeva P

நான் சித்தாந்த ரீதியாக என்னுடன் முற்றிலும் வேறுபடுபவர்களிடம் கொஞ்சமும் அரசியலை பற்றி விவாதிப்பதில்லை என்ற முடிவை சில வருடங்களுக்கு முன்னால் தான் எடுத்தேன். நான் அவர்களுடன் விவாதிப்பதை நிறுத்தியமைக்கு சில உண்மையற்ற காரணங்கள் நான் எதிர்பார்த்தது போலவே கற்பிக்கப் பட்டது –

“அவனுக்கு வலதுசாரி ஆதரவாளர்கள் மேல் எக்கச்சக்க வெறுப்பு. இந்தியா உட்பட பல நாடுகளின் வலதுசாரி அரசாங்கங்களின் அக்கிரமங்களைக் கண்டும் அவ்வரசுகளை வலதுசாரி ஆதரவாளர்கள் தொடர்ந்து ஆதரித்தும் கொண்டாடியும் வருவதை அவனால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அதனால் அவர்களுடன் பேச மறுக்கிறான்.”

“அவனுக்கு வலதுசாரிகளுடன் விவாதிப்பதில் பயம். அவர்களது தரப்பு நியாயங்கள் அவனது நெடுநாள் புரிதலின் அடிப்படைகளை சுக்குநூறாக உடைத்து விடும் என அஞ்சுகிறான்” இது பொதுவாக வலதுசாரி ஆதரவாளர்களின் என்னைப் பற்றிய புரிதல்.

“அவன் வலதுசாரிகளை சாதி, மத, இனவெறியாளர்களாக கருதுகிறான். அவர்களுடன் விவாதிப்பதே அவனுக்கு அவமானகரமான தோன்றுகிறது.”

இம்மூன்றில் எந்த வாதத்தையும் பொருட்டு நான் என் முடிவை தற்சமயம் எடுக்கவில்லை என்பதே மறுக்க முடியாத உண்மை.

ஆனால் பத்து வருடங்களுக்கு முன்பு வரை இக்காரணங்களில் சிலவற்றில் எனக்கு உடன்பாடு இருந்ததும் ஓர் அளவுக்கு உண்மை என்றே சொல்லியாக வேண்டும். நான் ஓர் இடதுசாரி குடும்பத்தில் பிறந்தமையால் வலதுசாரிகள் அனைவரும் மத, சாதி மற்றும் இன வெறியர்கள் என்றே எனக்கு கற்பிக்கப்பட்டு வந்தது. இந்துத்துவ ஆதரவாளர்களை ஒன்று பிராமண ஆதிக்க ஆதரவாளர்கள் அல்லது இந்துமத வெறியர்கள் என்றே எனக்கு அடையாளம் காட்டினர் இடதுசாரியினர். ஆனால் இறுதியில் உண்மை அவ்வளவு ஒற்றைப்படையானதாக இல்லை என்பதை பின்னாளில் புரிந்துகொண்டேன்.

***

“நேரு ஒரு பரம்பரை இசுலாமியர். அவருக்கு இந்தியாவை விட பாகிஸ்தானின் மேல் தான் பற்று அதிகம்.”

“இந்தியாவை இந்து நாடாக மாற்றும் முயற்சியில் அதன் ஜனநாயக விழுமியங்கள் அழிந்தாலும் அவை தவிர்க்க முடியாதவை. ஜனநாயகத்தை விட இந்து மத ஆதிக்கமே நம் நாட்டுக்கு அத்தியாவசியம் ஆகும்.”

இம்மாதிரி அபத்தமான அதே நேரத்தில் ஆபத்தான வாதங்கள் வலதுசாரிகளிடமிருந்து வரும்பொழுது, அதிர்ச்சியும் இனம்புரியா கோபமும் என்னை அப்படியே விழுங்க முற்படும்போது, எரிமலை போல் குமுறும் என் மனம் சொல்லும் மறுமொழிகள் இவைதான் –

“இவர் ஒரு பார்ப்பனர். இவருக்கு இனவெறி முற்றிப்போய் விட்டது. நம்மைப் போன்ற பிற்பட்ட சாதியினர் அரசு பதவிகளுக்கு வருவதைக்கண்டு நொந்து போய் இருக்கிறார். இவரது இனவெறியை இவரிடமே நாம் ஏன் கண்ணாடி போல் படம் பிடித்து காட்டக்கூடாது ? இவரை இனவெறியர் என்று சொன்னால் கண்டிப்பாக அதிர்ச்சியில் இதற்குமேல் நம்மோடு வாதத்துக்கு வர மாட்டார்!”

ஆனால் பிரச்னை என்ன வென்றால் நான் என் மனதில் அக்கணம் தோன்றியதை ஒருபோதும் அவர்களிடத்தில் பிரகடனப் படுத்தியதில்லை.

காரணம்? அவ்வாறு என்னுடன் வாதம் செய்பவர்களில் ஒருவர் கூட தனிப்பட்ட அளவில் என்னிடம் சாதிவெறியராக நடந்து கொண்டதே இல்லை என்பதே உண்மை. அலுவலகங்களில் என்னுடன் பணியாற்றிய வலதுசாரிகள், என் பக்கத்துவீட்டு மாமாக்கள் அனைவரும் எனக்கு நல்ல நண்பர்களாக பேச்சளவில் மட்டும் அல்ல, செயலளவிலும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் சாதிவெறியர்களாக இருப்பின் நான் அவர்களைவிட தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவன் என்று தெரிந்த மாத்திரத்திலேயே அவர்கள் என்னை ஒதுக்கி இருக்க வேண்டும். அல்லது எனது அரசியல்சாய்வுகள் தெரிந்தபோதாவது என்னிடம் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும். ஆனால் நான் அவர்களோடு ஆவேசமாக சொற்போர் புரிந்த அதே மாலைகளில் அவர்கள் என்னை அவர்கள் வீட்டிற்கு அழைத்து காபி பரிமாறி இருக்கிறார்கள். என்னை அவர்களது வாகனத்தில் அழைத்து சென்று எனது வீட்டில் விட்டிருக்கிறார்கள். அவர்களது வெளியே சொல்லமுடியாத குடும்ப பிரச்னைகளை என்னிடம் சொல்லி புலம்பி தீர்த்திருக்கிறார்கள். இவ்வளவு ஏன் அவர்களது காதல் வாழ்க்கைக்கு என்னிடம் ஆலோசனை கேட்டு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.

எனவே, தனிப்பட்ட வாழ்க்கையில் நல்லவர்களாகவும் பண்பாளர்களாகவும் பழக இனிமையானவர்களாகவும் இருக்கும் இவர்கள் எதற்காக சாதி, இன மற்றும் மதவெறியை ஊக்குவிக்கும் கட்சிகளை ஆதரிக்கவேண்டும் ?

சமீபத்தில் காடுவெட்டி குரு என்ற ஓர் மறைந்த அரசியல் தலைவரின் பேட்டியை நான் காண நேர்ந்தது. எனக்கு தெரிந்த இடதுசாரி நண்பர்கள் அவரை சாதி வெறியர் எனவும் தமிழகத்தில் நடந்த பல ஆணவக்கொலைகளுக்கு அவரே முக்கிய காரணம் என்றும் அவரை அறிமுகப்படுத்தி இருக்கின்றனர். அவரது கட்சியும் தொன்றுதொட்டு ஒரு தனிப்பட்ட ஒடுக்கப்பட்ட சாதியை எதிர்த்தே அரசியல் செய்து வந்தது என்று நான் பல ஆண்டுகளாக கேள்விபட்டதுண்டு.

அதே வேளையில் அந்த கட்சிக்கு அணுக்கமாக இருக்கும் சில ஆளுமைகள் – சீமான், தங்கர் பச்சான் போன்றோர் மார்க்சியம், பெரியாரியம் போன்ற முற்போக்கு சித்தாந்தங்களில் பரிச்சயம் மட்டும் பெற்றவர்களாக அல்லாமல் அவற்றை தொடர்ந்து பிரச்சாரம் செய்பவர்களாகவும், அந்த சித்தாந்தங்களை இளைஞர்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் புரியும் விதத்தில் எடுத்துரைப்பவர்களாகவும் பேர் பெற்றிருக்கின்றனர். நான் அந்நியன் படத்தில் வரும் பிரகாஷ்ராஜ் போல் குழம்ப காரணம் இல்லாமல் இல்லை – “சாதிவெறி பேசும் தலைவர்களும் மார்க்சியம் பேசும் ஆளுமைகளும் ஒரே கட்சிக்கு நெருக்கமானவர்களா?”

நான் பார்த்த அந்த பேட்டியில் காடுவெட்டி குரு அவர் ஏன் அரசியலுக்கு வந்தார் என்பதை விளக்கும்பொருட்டு ஒரு முக்கியமான சம்பவத்தை குறிப்பிடுகிறார். வடதமிழகத்தில் பெரும்பான்மையாக இருக்கும் வன்னிய சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு ஏதும் இல்லாத காரணத்தினாலும், அவர்கள் பெருமளவில் வேளாண்மையை நம்பி இருந்ததாலும், இந்தியாவெங்கும் வேளாண்மை லாபகரமான தொழிலாக இருந்த காலம் மலைஏறிவிட்டதாலும் அச்சமூகத்தை சேர்ந்தவர்கள் பெருமளவில் வறுமையில் வாடினார்கள் என்று கூறுகிறார். எனவே அவர்களுக்கு மக்கள்தொகை அடிப்படையில் தங்களது எண்ணிக்கைக்கு ஏற்றவாறு அரசு பணியிடங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு தர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதாகக் கூறுகிறார். அவ்வாறு வறுமையில் உழன்ற அச்சமூகம் வழிநடத்த சரியான ஜனநாயக தலைமை இல்லாததனால் கம்யூனிச சித்தாந்த அடிப்படையில் உருவான நக்சல்பாரி இயக்கங்களில் இணைய இசைந்ததாகவும் கூறுகின்றார். ஆனால் எண்பதுகளில் ராமதாஸ் என்னும் ஓர் தலைவரின் எழுச்சி அவர்களுக்கு நம்பிக்கை தந்ததாகவும் அவர்களில் பலர் மீண்டும் ஜனநாயக வழிக்கே திரும்பியதாகவும் கூறுகிறார்.

இந்த பேட்டியின் மூலம் நான் புரிந்துகொண்டவை இரண்டு – எவ்வாறு பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்தவர்களில் சிலர் கம்யூனிச கண்ணோட்டம் உள்ளவர்களாக இருக்கிறார்கள், எவ்வாறு சாதி அடிப்படையிலான கட்சிகள், முக்கியமாக வலதுசாரி சிந்தனை உள்ள கட்சிகள் இந்தியாவெங்கிலும் உருவாகி வந்திருக்கின்றன என்பவையுமே.

திடீரென்று உருவாகி செல்வாக்கு பெரும் கட்சிகள் எவையுமே சாதி, மத மற்றும் இன வெறியினை மட்டுமே அடிப்படையாக கொண்டு வளர்ந்தவை அல்ல. அவை உருவாவதற்கு வேண்டுமானால் சாதிவெறியோ அல்லது மதவெறியோ அவற்றின் மூலமாக பலன்பெறும் சக்திகளோ காரணமாக இருக்கலாம். ஆனால் அவை மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறுவதற்கு கண்டிப்பாக ஒரு பொருளாதாரக் காரணம் அவசியம்.

இந்தியாவெங்கும் கடந்த முப்பது ஆண்டுகளில் வேளாண்மை, கைவினை போன்ற தொழில்கள் வீழ்ச்சி அடைந்ததும் அத்தொழில்களை நம்பி இருந்த பல லட்சக்கணக்கான மக்களுக்கு லாபம் தரக்கூடிய மாற்று தொழில்களை பல தசாப்தங்களாக நம்மை ஆண்டுவந்த காங்கிரஸ் கட்சி உருவாக்கித்தராமையுமே இந்து, பிராமண சக்திகள் இயக்கும் பாரதிய ஜனதா கட்சி போன்ற வலதுசாரி கட்சிகள் செல்வாக்கு பெற காரணம். அதே காரணங்களின் பொருட்டே ஒவ்வொரு மாநிலத்தின் தொன்றுதொட்டு சமூக ரீதியாக கோலோச்சி வந்த நடுநிலை சமூகங்கள் தங்களுக்கென ஜாதிக்காட்சிகளை உருவாக்கினார்கள். இந்த வலதுசாரி கட்சிகள் வறுமையில் உழலும் அச்சமூகங்களுக்கு சரியான பொருளாதரப்பாடத்தை புகட்டாமல், மாறாக தொன்றுதொட்டு அந்த நடுநிலை சாதிகளுக்கு எதிர் தரப்பாக இருந்த, சமூகத்திலும் பொருளாதாரத்திலும் மென்மேலும் தாழ்ந்து இருந்த தலித்துகளையோ அல்லது மாற்று மதத்தினரையோ குற்றவாளிகளாக காட்டியே மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றனர். அவர்கள் குற்றவாளிகள் என கை காட்டும் மற்ற சமூகங்கள் இந்தியா விடுதலை பெற்ற சில தசாப்தங்களில் காங்கிரஸ் கட்சியின் சிறந்த, முற்போக்கு தலைவர்களின் முயற்சிகளினால் அவர்கள் நூற்றாண்டுகளாக சமூக அடுக்கின் கீழ் சிக்கி தவித்து வந்த காரணத்தினால் மட்டுமே இட ஒதுக்கீடு போன்ற சில சலுகைகளை பெற்றார்கள் என்பதும் உண்மை. ஆனால் அதே காரணத்தை காட்டி இந்த வலது சாரி கட்சிகள் காங்கிரஸ் மற்றும் திமுக, கம்யூனிஸ்ட் போன்ற முற்போக்கு கட்சிகளை சாதி அல்லது மத வெறி பிடித்த கட்சிகள் என மக்களுக்கு அடையாளம் காட்டி அவர்கள் மத்தியில் செல்வாக்கு பெற முனைந்தன.

ஆனால் இந்த கட்டுரையின் மையம் வெறும் வலதுசாரி கட்சிகள் எப்படி இந்தியாவில் செல்வாக்கு பெற்றார்கள் என்பதுவோ அல்லது அவற்றுக்கான பொருளாதாரக் காரணங்கள் மட்டுமோ அல்ல.

எந்த வலதுசாரிக் கட்சியின் தலைமையும் சுயசாதிப் பெருமையை நம்பி மட்டுமே பிரச்சாரம் செய்ய முற்படுவதில்லை. சுயசாதிப் பெருமையோ அல்லது அதன் அடிப்படையில் கட்டி எழுப்பப்பட்ட மாற்று சமூக துவேஷமோ நேரடியாக எந்த சாமானிய மனிதனின் மனசாட்சியையும் எழுப்ப வல்லவை அல்ல. சகமனிதனின் மீது வெறுப்பை உமிழ்ந்து மட்டுமே எந்த கொள்கையாலும் ஒரு மனிதனின் மனதைத் தொட இயலாது என்பதே எனது புரிதல். இருபத்தோராம் நூற்றாண்டில் வாழும் நம் சமூகத்தில் தெரிந்தோ தெரியாமலோ ஐரோப்பாவின் அறிவொளிக்காலத்தின் (enlightenment) விழுமியங்கள் கல்வி, மதம் உள்ளிட்ட எல்லா அடிப்படை அடுக்குகளிலும் கலந்துவிட்டன.

அனைவரும் பிறப்பின் அடிப்படையில் சமம் என்பதும், ஒருவரையும் காரணமின்றி வெறுத்தலோ, துன்புறுத்தலோ, அழித்தலோ தவறு போன்ற அடிப்படை அறங்களும் இக்கால மத, கல்வி, கலாச்சாரக் களங்களில் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு வந்திருக்கின்றன. அத்தகைய சூழலிலேயே கடந்த நூறாண்டுகளில் பிறந்த அத்தனை மனிதர்களும் வளர்ந்த வந்த காரணத்தினால் அவர்களின் அடிப்படை சுபாவமானது சாத்வீகமாகவும், சமத்துவத்தை ஒத்ததாகவும் அமைந்து வந்தது. இந்த நிலையே இறுதியில் இந்த வலதுசாரிக்கட்சிகள் எழுப்ப விரும்பிய சுயசாதி, இன, மத கௌரவ உணர்வுகளுக்கு எதிரானதாக முடிந்தது. எனவே இத்தகைய விழுமியங்களே இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற வாறு வலதுசாரிக்கட்சிகள் வேறு வழியின்றி தங்களது பிரச்சார முறையையும் உத்தியையும் திருகியோ முற்றிலுமாக மாற்றியோ அமைக்க பணித்தது.

எனவே, எனது பக்கத்துவீட்டு வலதுசாரி அன்பர் ஒரு சாதிக்கட்சியை ஆதரிப்பது என்பது அவரது சுயசாதிப்பற்றையோ அல்லது பெருமையையோ பறைசாற்றும் செயல் மட்டுமே என நான் அர்த்தம் கற்பித்துக்கொள்ள எந்த அடிப்படையும் இல்லை என்பதே எனது தாழ்மையான அவதானிப்பு. அவர் வளர்ந்த சூழலோ அவர் அன்றாடம் பழகும் சமூகமோ ஒரு குறிப்பிட்ட சாதி, மத வலதுசாரி இயக்கத்தின் தாக்கம் கொண்டிருக்குமாயின் அவை மீண்டும் மீண்டும் அவரிடம் அழுத்தி சொல்லியிருக்கும் ஓர் அடிப்படை வாசகம் –“நீயும் நீ சார்ந்திருக்கும் நமது சமூகமும் மாற்று சமூகக்கூட்டத்தினரின் சாசுவதமான பிறவிக்குணங்களினால் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வந்திருக்கின்றன. இப்படியே சென்றால் நாளை நாம் நம் ஊரினிலேயே அகதிகளாய் வாழ தலைப்படுவோம். எனவே விழித்துக்கொள்! என்னை பின்தொடர்!!”

தமது இயக்கத்திற்கு மேலும் மேலும் புதியவர்களை தேடும் எந்த ஒரு வலதுசாரி இயக்கமும் இப்படிப்பட்ட, மனதை அச்சுறுத்தும் தம்மை முழுக்க முழுக்க பாதிக்கப்பட்டவர்களாகவே பெரும்பாலும் பொய்யாக சித்தரிக்கும் பிரச்சாரங்களையே கையில் எடுத்து வெற்றி பெறும். நாமெல்லாம் பிறவியிலேயே ஆள பிறந்தவர்கள் என்றோ, மற்றவர்கள் அனைவரும் நமக்கு கட்டுப்பட்டு வாழப்பிறந்தவர்கள் என்று மட்டுமே பிரச்சாரங்கள் செய்வதெல்லாம் இந்த காலத்தை சேர்ந்த மக்களை எந்த விதத்திலும் சென்றடையாது.

***

வலதுசாரி ஆதரவாளர்களை கொச்சையாகக் கருதும் நம்மில் பலர் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய ஒன்று இருக்கிறது – நாமும் அவர்கள் வளர்ந்த சூழலில் வளர்ந்திருந்தால், அவர்கள் தினசரி கேட்டு வளர்ந்த ஊதிப்பெரிதாக்கப்பட்ட பொய்கள், வசைகள், அரைகுறை உண்மைகள், திரிக்கப்பட்ட வரலாற்று தரவுகள் ஆகியவற்றைக் கேட்டிருந்தால், நாமும் கிட்டத்தட்ட அவர்களது அரசியல் இயல்புகளையும் தாக்கங்களையும் கொண்டிருக்க எக்கச்சக்க வாய்ப்புகள் உள்ளன என்பதுவே.

காரணம், இந்த வலதுசாரி இயக்கங்கள் முதலில் குறி வைப்பது சாமானிய மனிதனின் கீழான மிருக உள்ளுணர்வுகளையோ, புதைக்கப்பட்ட காட்டு மிராண்டி சுபாவங்களையோ அல்ல – மாறாக மனிதனின் அடிப்படை அற உணர்வை. அவனுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளின் பொருட்டே அவனது மனசாட்சி இவ்வியக்கங்களின் பிரச்சாரங்களால் சீண்டப்படுகின்றது. அவை வேறு ஒரு சமூகத்தினரால் அபகரிக்கப்பட்டுவிட்டன என்னும் பொய் பிரச்சாரங்களினாலேயே அவன் தன்னை பாதிக்கப்பட்டவனாக உணருகிறான். அபகரிக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் அறத்திற்கு மாறான செயல்களுக்கும் நியாயம் கற்பித்துக்கொள்கிறான்.

***

அநேகமாக இந்த கட்டுரையின் மைய கேள்விக்கு ஓர் அளவுக்கு சரியாக பதில் அளித்துவிட்டேன் என நம்புகிறேன். ஆனால் அதே கேள்வியை மறுமுனையில் இருந்து அணுகலாம் எனவும் நினைக்கிறேன். ‘எல்லா வலதுசாரி ஆதரவாளர்களும் சாதி மத வெறியர்கள் இல்லை தான். சரி. ஆனால் அவர்களுள் சாதி மத வெறியர்களே இல்லையா என்ன ?’ என்ற கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும்.

கண்டிப்பா சாதிவெறியர்கள் இருப்பார்கள். சுயசாதி பெருமைகொள்பவர்களும் இருப்பார்கள். ஆனால் அவர்களில் கணிசமானவர்கள் இக்கட்சிகள் செய்த பொய் பிரச்சாரங்கள் பொருட்டே, தமது உரிமைகளைக் காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்ற நியாயமான பயத்தின் காரணமாகவே அவற்றை பின்பற்றத் தொடங்கியிருப்பர். அதன் பின்னர் திரிக்கப்பட்ட வரலாற்று உண்மைகளும், அறிவுக்கு சிறிதும் ஒவ்வாத பழமைவாத சிந்தனைகளும் அன்றாடம் ஊட்டப்பெற்று ஒரு கட்டத்தில் சாதி, மத பற்றுகொண்டவர்களாக மாறி இருப்பர் என்பதே எனது கூற்று. இன்று அரியணை ஏறி மற்றவனை அடிமைப்படுத்தினால் மட்டுமே பின்னாளில் தமது கால்களை பிணைக்கவரும் அடிமைச்சங்கிலியிலிருந்து தம்மை காப்பாற்றிக்கொள்ளமுடியும் என்னும் போலியான அதே நேரத்தில் ஆபத்தான இடத்திற்கும் இறுதியாக சென்று சேருகின்றனர்.

***

இறுதியாக நான் முதலில் குறிப்பிட்ட கேள்விக்கு வருகிறேன். “நான் ஏன் வலதுசாரி ஆதரவாளர்களுடன் அரசியல் விவாதிப்பது இல்லை?”

“நான் செய்வது தவறு. ஆனால் இப்படிச்செய்வதில் எனக்கு ஆதாயம் இருக்கிறது. அதனால் இதை செய்கிறேன்” எனத் தெளிவாக உணர்ந்துகொண்டு வலது சாரி அரசியலை ஆதரிப்பவர்களுடன் தொடர்ந்து உரையாடி ஒரு கட்டத்தில், உள்ளூர பூட்டப்பெற்ற இரும்புக்கேட்டினை அதன் இடைவெளிகளின் ஊடாக ஒரு கைவிட்டு திறப்பது போல் அவர்களது மனசாட்சியினை உசுப்பிவிட முடியும். வாதங்களில் வென்று அவர்களது போலித்தனத்தைத் தோல் உரிக்க முடியும். ஆனால் ‘நான் செய்வதே அறம். அதுவே என்னையும் என் சமூகத்தையும் எதிரியிடம் இருந்து காப்பாற்றும்’ என மனதார நினைப்பவரிடம் நான் பேச என்ன இருக்கிறது ?

 
 
 

Comments


Post: Blog2_Post

Subscribe Form

Thanks for submitting!

(213) 270-2839

©2022 by Hayat Hotel. Proudly created with Wix.com

bottom of page