Readers Write In #860: விடுமுறை
- Trinity Auditorium

- Sep 21
- 4 min read
By Ananya Natarajan
(This was my first attempt at writing in Tamil, so any comments/feedback is appreciated!)

வெற்றிவேல் கல்யாண மண்டபத்தின் விளிம்புகளை ஒட்டி ஒரு முட்டுச்சந்து ஓடியது. அந்த சந்துக்குள் ஒரு பெரிய இரும்பு கதவு, ஒரு காலி கட்டிடம் மற்றும் இரு அடுக்குமாடி வீடுகள் வரிசையில் நின்றன.
ஏழாவது வருடத்தில் திணறும் ‘ஸ்கூட்டியை’ அம்மா அந்த சந்துக்குள் ஓட்டினாள். வண்டி வாங்கிய புதிதில் ஊதா நிறத்தில் ஜொலித்தது. ஆனால் இப்போது அதன் இருக்கை பூனையால் பிராண்டப்பட்டிருந்தது. ஒரு முன் விளக்கு சரியாக வேலை செய்யவில்லை. இன்று வண்டியை ஓட்டத் தொடங்குவதற்குள் போதும்-போதும் என்று ஆகிவிட்டது.
அம்மாவிற்குப்பின திவ்யாவும் கார்த்திக்கும் இருக்கையில் துள்ளினார்கள். மண்டபத்திலிருந்து வரும் நாதஸ்வர ஓசை வண்டியின் சத்தத்துடன் மோசமாகக் கலந்து வந்தது. திவ்யா அவளது அம்மாவிற்கும் அண்ணனிற்கும் ஊடே அமர்ந்திருந்தாள். அவளது கைகள் அம்மாவின் ‘கமீசை’ இறுக்கமாக பிடித்திருந்தது. கார்த்திக்கின் கன்னம் அவளது தலைமேல் சாய்ந்து இருந்தது.
வண்டி நின்றதும் இருவரும் கடைசி வீடை நோக்கிப் பாய்ந்தார்கள். திவ்யா கதவை மெல்ல திறந்து சத்தமில்லாமல் சமையலறைக்குள் சென்றாள். தாத்தா மேடையில் குடைமிளகாய் நறுக்கிக்கொண்டிருந்தார். பாட்டி அடுப்பில் ரவை கிண்டிக்கொண்டிருந்தார்.
இருவரும் திவ்யாவைப் பார்க்கவில்லை.
அவள் தாத்தாவை பயமுறுத்த அவர்பின்னால் மெதுவாக சென்றாள். அவள் ‘பூ’ என்று தாத்தாவின் காதில் கத்துவதற்குமுன் வாசலிலிருந்து கார்த்திக்கின் குரல் கேட்டது. ‘நான் வந்துட்டேன்’ என்று சத்தமாக உரைத்தான்.
தாத்தா பின்னேதிரும்பி திவ்யாவை கண்டு சிரித்தார். ஆனால் திவ்யாவின் பார்வை வேறுதிசையில் இருந்தது. கோபத்துடன் கார்த்திக்கின் கையை அடித்தாள். ‘தாத்தாவ பயமுறுத்தணும்னு பாத்தேன், அத கெடுத்துட்ட!’ ‘நீ ஒரு டுபாகூரு,’ என்று அவளை கேலி செய்தான்.
திவ்யாவுக்கு சூடு ஏறியது. அவன் தோளைப்பிடித்து அவனைத்தள்ள ஆரம்பித்தாள். இருவரும் சண்டையில் முந்த முயன்றார்கள். கார்த்திக் திவ்யாவை மேடை எதிரில் கிட்டத்தட்ட சிக்கவைத்தான். கடைசி நிமிடத்தில் அவள் இன்னொரு பக்கம் குதித்து பாட்டி மேல் விழுந்தாள். தவறான கடாயில் எண்ணெய் விழுந்தது.
பாட்டி குழந்தைகளுக்கு முன் ஒரு கரண்டியை ஆட்டினாள், ‘ரெண்டுபேரும் அடிவாங்க போறீங்க.’ ஒருநொடியில் அவர்கள் அங்கிருந்து ஓடினார்கள்.
**********************
‘அங்க யாரு இருக்கா நெனைக்கற?’ திவ்யா கேட்டாள். இருவரும் தாத்தா குடுத்த வெள்ளரிக்காயை தின்றுகொண்டிருந்தார்கள். அவள் முகம் ஜன்னல் வெளியில் நீண்டிருந்தது. இரும்பு வாயிலுக்குப்பின்னால் நிற்கும் மாளிகையை உத்து பார்த்தாள்.
‘வேட்டையன் ராஜா,’ என்று அவன் நகத்தை கடித்துக்கொண்டு பதிலளித்தான்.
அவள் அவனை சந்தேகத்துடன் பார்த்தாள். ‘இத என்னை நம்ப சொல்றியா? அம்மாகிட்ட நீ நகத்த கடிக்கறன்னு சொல்லப்போறேன்.’ இந்த எச்சரிக்கையைக் கார்த்திக் காதில் போட்டுக்கவில்லை. ‘கிரிக்கெட் விளையாடலாமா?’ என்று கேட்டான்.
இருவரும் கட்டை மற்றும் ஒரு பிதுங்கிய ‘பிளாஸ்டிக்’ பந்தையும் எடுத்து கொண்டு கீழே சென்றார்கள்.
முதல் பந்து சுவரை தாண்டி மாளிகை முன் விழுந்தது. இருவரும் பெருமூச்சு விட்டார்கள். கார்த்திக் மாளிகையின் திசையில் சென்றான். ‘எங்க போற?’, திவ்யா கேட்டாள். ‘பால எடுக்க.’ ‘அங்க போகக்கூடாதுன்னு பாட்டி சொல்லி இருக்கா! அங்க ஏதாவது பேய் இருந்தா நம்மள கொன்னுடும்.’ ‘ஒன்னு ஆகாது, வா,’ என்று அவளை இழுத்து கொண்டு சென்றான்.
இரும்பு வாயில் திறந்திருந்தது. இருவரும் சஞ்சலத்துடன் மெதுவாக உள்ளே சென்றார்கள். அவர்கள் செருப்பின் அடியில் காய்ந்த இலைகள் நொறுங்கியது. ‘அங்க இருக்கு!’ திவ்யா உரைத்தாள். புல்லின் நடுவில் அந்த சிவப்பு பந்து ஒளிந்திருந்தது. ‘டேய்! எடத்த காலி பண்ணு.’ வேஷ்டி மடித்து கொண்டு ஒரு ஆள் மாளிகையிலிருந்து அவர்களை நோக்கி வந்தார். சட்டென்று பந்தை திவ்யா எடுத்தாள், இருவரும் மின்னல் வேகத்தில் ஓடினார்கள்.வீடு சேரும் வரை திரும்பிப் பார்க்கவில்லை.
‘அது கண்டிப்பா வேட்டையன் ராஜா இல்ல,’ திவ்யா சொன்னாள்.
********
சாயங்காலம் மேகமூட்டம் நிர்மபிய வானத்தை கொண்டுவந்தது. பாட்டியின் மடியில் அம்மா சாய்ந்திருந்தாள். தாத்தா ‘டீவி’யில் சமையல் நிகழ்ச்சியை கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். அப்பப்போ அவர் புத்தகத்தில் குறிப்பு எழுதிக்கொண்டார். கார்த்திக் பந்தை காலால் உருட்டிகொண்டு அறையைச் சுற்றினான். ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதுபோல் தோன்றியது. பரணையில் கண்டுபிடித்த ஒரு மளையாலபுத்தகத்தின் காக்கி நிறமடைந்த பக்கங்களை திவ்யா திருப்பிக்கொண்டிருந்தாள். கேரளாவில் தாத்தா இருந்த சிறுவயது நாட்களின் நினைவுச்சின்னமாக அதை வைத்திருந்தார்கள்
‘ராத்திரி என்ன சமைக்கலாம்?’ பாட்டி தாத்தாவிடம் கேட்டார். அவருக்கு கேட்கவில்லை போல. பாட்டி மறுபடியும் கேட்டார், ஆனாலும் பதில் வரவில்லை.
கார்த்திக் தாத்தாவை தட்டி பாட்டியின் திசையில் கையை நீட்டினான். ‘இதுக்குதான் ‘ஈ.என்.டி’கிட்ட போணும்னு நாலுமாசமா சொல்லிண்டிருக்கேன்,’ பாட்டி சத்தமாகச் சொன்னார். ‘என் காதில எந்த பிரச்சனையும் இல்ல. நீங்க கொஞ்சம் சத்தமா பேசணும்,’ தாத்தா எதிருரைத்தார்.
இருவரும் வாதாட ஆரம்பிப்பதற்குள், திவ்யா நடுவில் கூறினாள், ‘எனக்கு பசிக்குது.’ ‘ உப்மா டேபிள் மேல இருக்கு, எடுத்துக்கோ.’ கொஞ்சம் நேரத்துக்கு அமைதி நிறைந்திருந்தது.
‘நகத்த கடிக்காதே,’ அம்மாவும் பாட்டியும் ஒரே குறளலில் கார்த்திக்கிடம் கத்தினார்கள். ஒரு நொடியில் அவன் வாயிலிருந்து கை விழுந்தது.
‘நாளைக்கு யோகா பண்ணலாம் தாத்தா!’ திவ்யா உப்புமாவை வாயில் வைத்துகொன்டு சொன்னாள். ‘முதல ஏந்துக்கறியான்னு பாக்கலாம்.’ என்று பதில் வந்தது.
**********************
‘இன்னு கொஞ்சம் தோண்டு.’ தாத்தா சுவரில் ஒரு கையை வைத்து குழந்தைகள் குழி தோண்டுவதை பார்த்தார். தரையில் ஒரு கைப்பிடி மண்ணில் ஒரு கற்பூரவல்லி கிளை உட்கார்ந்தது. தாத்தா அதை கவனமாக குழிக்குள் நட்டார். வேருக்கு மேல் மண் வைத்து அதன் மேல் தண்ணீர் தெளித்தார்.
அடுத்த வேலை எளிதானது – செடிகளுக்கு தண்ணீர் விடுவது. தண்ணீர் பிடிக்கும்பொழுது இரு குழந்தைகளுக்கும் நடுவே சர்ச்சை. கடைசியில் தலையிலிருந்து முழங்கால்வரை நனைந்து நின்றார்கள். துளசி செடியை சுற்றிவரும் பாட்டி அவர்களைக்கண்டு சிரித்தார்.
மொட்டை மாடியில் பலவகை மற்றும் அளவுகளில் தொட்டிச்செடிகள் இருந்தன. முப்பது வயது கொண்ட மாங்கா மரத்திலிருந்து விழுந்த காய்ந்த இலைகள் தரையில் கொட்டி கடந்தன.
மழைத்துளிகள் விழ ஆரம்பித்தது. ‘தண்ணி ஊத்த வேண்டாம் போலருக்கு,’ தாத்தா சொன்னார். சாரல் விரைவாக கனமழையாக மாறியது. நால்வரும் அவசரமாக கொடியிலிருந்து துணியை எடுத்துக்கொண்டு கீழே சென்றார்கள்.
**********************
அம்மா கார்த்திக்கின் கொட்டாவியை பார்க்க தவறவில்லை. ‘ரஜாயைக் கீழ போடலாம்.’ கருநீலம் கொண்ட மெத்தை அலமாரியிலிருந்து ‘பால்கனி’ வரை விரிந்தது. தலையை சாய்த்தவுடன் பாட்டியைக்கதை சொல்ல நச்சரித்தார்கள். தாத்தா ஒரு குட்டி கடிகாரத்தை தலையணை பக்கத்தில் வைத்து குறட்டைவிட ஆரம்பித்தார். இருளில் பாட்டியின் தங்க செயின் மின்னியது.
தையல்காரன் யானைக்கு ஊசி வைத்து வாழைப்பழத்தை குடுப்பதற்குள், இரு குழந்தைகளும் அசந்து தூங்கிவிட்டார்கள்
**********************
திவ்யா வேகமாக எழுந்தாள். அவள் கனவில் ஒரு பிசாசு அவளது வயிற்றை அறுக்க வந்தது மற்றும் ஒரு புலி அவளைச் சுற்றியது. அறையில் எந்தவிதமான பயங்கர பிராணிகள் இல்லை என்பதை கண்டதும் அவள் இதயத்தின் துடிப்பு குறைந்தது. தூக்கக்கலக்கத்துடன் எழுந்து, கார்த்திக்கின் கால் மேல் கிட்டத்தட்ட தடுக்கி விழுந்தால் (அறையின் ஒரு பக்கத்திலிருந்து எதிர்பக்கம்வரை எப்படி அவன் கால் நீண்டது?).
சமயலறைக்குள் சென்றாள்.
மேடையில தம்ப்ளரில் ராகி கஞ்சி இருந்தது. அதை எடுப்பதற்கு முன் குரல் கேட்டது, ‘போய் பல்ல தேச்சுட்டு வா.’ திவ்யா முணங்கிகொண்டு போனாள். இந்த முறை கார்த்திக்கின் கணுக்கால் மேல் தடுக்கி ‘பட்டார்’ என்று விழுந்தாள். அவனால் ஏற்பட்ட பாதிப்பை அறியாமல் அவன் கண்ணயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான்.
********
யோகா செய்வதற்க்கு தாத்தா வெள்ளை பனியனும் காக்கி ‘ஷார்ட்சும்’ அணிந்தார். பத்மாசனத்தில் காலை மடக்கி கையால் தன் உடம்பை தரையிலிருந்து தூக்கினார். பனைமரம் காற்றில் ஆடுவதுபோல் ஒரு பக்கத்திலிருந்து இன்னொருபக்கம் அசைந்தார். கார்த்திக்கும் திவ்யாவும் அவரை பின்பற்றினார்கள். ‘சவாசனம்’ செய்தப்பின் மூவரும் பசியுடன் சாப்பிடச் சென்றார்கள்.
‘அவனுக்கு இன்னும் ஜாஸ்தி ‘ஜாம்’ போட்டுருக்க,’ திவ்யா கார்த்திக்கின் தட்டை பார்த்து சொன்னாள். ‘ஒனக்கு கண்ணாடி வாங்கணும் போலருக்கு. என்ன பாரு, நான் ‘ஜாமே’ போட்டுக்கல. பேசாம சாப்புடு.’ ‘கொழந்தைய திட்டாதே. இந்தா, இன்னும் கொஞ்சம் போட்டுக்கோ.’ அம்மா அவள் அம்மாவை பார்த்து முறைத்தாள். ‘எனக்கும் தம்பிக்கும் ஒரு நியாயம், பேரன் – பேத்திக்கு ஒரு நியாயமா.’
**********************
உரம் செய்வதற்கு தாத்தா ஒரு பானையில் காய்கறி மற்றும் பழத்தோல் தூவி மண்ணால் அதை மூடினார். பிள்ளையார் எறும்புகள் பானை மேல் ஓடியது.
‘ஒன்னோட ‘ஹேர்கட்’ சூப்பரா இருக்கு தாத்தா.’ கார்த்திக்கின் விரல்கள் தாத்தாவின் முடியை வருடியது. இருபக்கத்திலும் அவரது வெள்ளைமுடி வெட்டப்பட்டிருந்தது, நடுவில் நீளமாக இருந்தது. ‘ஆமா, பார்பர் இது நல்லா இருக்கும்னு சொன்னாரு.’
‘ரெண்டுபேரும் டீ போட வாங்க,’ பாட்டி அழைத்தார். தண்ணீர் கொதிக்கும் நேரத்தில் அவர் கொல்கத்தாவில் படித்த பள்ளிக்கூடத்தின் கதைகளை உரைத்தார். அவர் பெங்காலி பேசுவதை இருவரும் உன்னிப்புடன் கேட்டார் – தெரியாத மொழியின் பயன்பாடுகள் அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
‘நம்ம அரை மணி நேரத்தில கிளம்பணும், ரெடியா இருங்க,’ என்று அம்மா சொன்னாள்.
**********************
அம்மா, கார்த்திக் மற்றும் திவ்யா ‘ஸ்கூட்டியின்’ மேல் ஏறினார்கள். குழந்தைகள் இருவரும் வாசலில் நிற்கும் தாத்தா பாட்டியிடம் ‘டாடா’ என்று கண்காணும் தூரம் வரை கையாட்டினார்கள்.
அது அவர்கள் தாத்தாவைப்பார்க்கும் கடைசி நாள் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
**********************





Comments